அரியநாயகிபுரத்தில் தற்கொலை செய்த பள்ளி மாணவர்.. உடலை வாங்க மறுத்து 5 வது நாளாக பொதுமக்கள் போராட்டம்..

author img

By

Published : Oct 18, 2022, 7:39 PM IST

Etv Bharat

அரியநாயகிபுரத்தில் தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவர் உடலை வாங்க மறுத்து 5 வது நாளாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு திராவிடத் தமிழ் அமைச்சை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்ய முற்பட்ட போது போலீசாருக்கும் பொதுமக்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தென்காசி: கடையநல்லூர் அருகே அரியநாயகிபுரத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவர் உடலை வாங்க மறுத்து 5வது நாட்களாக அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உடலை வாங்கவில்லையெனில் நல்லடக்கம் செய்யப்படும் என போலீசார் அவர்களிடம் அறிவிப்பு நோட்டீஸை வழங்கினர். அப்போது போராட்டத்திலிருந்த திராவிட தமிழ் கட்சியைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர். இதனால், அப்பகுதி மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஆறுமுகம் என்பவரது 12 வயது மகன் அங்குள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவர் கடந்த 14 ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது அவர் இறந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் மாணவர் உடல் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் மாணவரின் தந்தை ஆறுமுகம் பள்ளிக்கூடம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, புகார் அளித்தார். இதையடுத்து மாணவரின் உடலை வாங்க மறுத்து 5வது நாளாக அப்பகுதி மக்கள் தங்கள் வசிப்பிடத்திலேயே போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று (அக்.18) சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதீர் அப்பகுதி மக்களிடம், மாணவரின் உடல் கூராய்வு முடிந்து 5 நாள் ஆகிவிட்டதால், சட்டப்பிரிவு 2-ன் கீழ் 25-ன் படி தொற்று பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே, பிரிவு 45 ன் படி மாணவர் உடலை நல்லடக்கம் செய்ய வேண்டி வரும். எனவே உடலைப் பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறினார். இதற்கு மாணவரின் தாயார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் மகனின் உடலை வாங்குவதாகத் தெரிவித்தார். இதனால் அவர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது திராவிடத் தமிழ் அமைப்பைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதனால் போலீசாருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன்பின்னர் மூன்று பேரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். இதனிடையே அப்பகுதி மக்களைச் சட்டவிரோத செயல்களில் ஈடுபடத் தூண்டும் வகையில் யாரேனும் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

அரியநாயகிபுரத்தில் தற்கொலை செய்த மாணவர் உடலை வாங்க மறுத்து பொதுமக்கள் போராட்டம்

இதையும் படிங்க: பில்கிஸ் பானு வழக்கு - குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்த மனுக்கள் மீதான விசாரணை நவ.29ம் தேதித்து ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.