ETV Bharat / state

விசிக கொடிக்கம்பம் அமைப்பதற்கே பெரும் யுத்த போராட்டம்: கண்ணீர் வடித்த கட்சி நிர்வாகி.!

author img

By

Published : Jul 24, 2023, 2:29 PM IST

விசிக-வின் கொடிக்கம்பம் அமைப்பதற்கே பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது என அக்கட்சியின் சங்கரன்கோவில் துணைச் செயலாளர் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

விசிக நிகழ்ச்சி

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடிக்கம்பம் அமைப்பதற்கே பெரிய யுத்த போராட்டம் நடத்த வேண்டிய உள்ளதாக அத்தொகுதியின் துணைச் செயலாளர் கண்ணீர் மல்க பேசியதை தொடர்ந்து, கட்டுப்பாடோடு எதையும் சாதிக்க வேண்டும் என அக்கட்சியில் தலைவர் தொல்.திருமாவளன் அறிவுறுத்தினார்.

அங்குள்ள செவல்குளம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 60 அடி கொடி கம்பம் அமைக்கப்பட்டது. இந்த கொடிக்கம்பத்தில் கொடியேற்றும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கலந்துகொண்டார். அவருக்கு அக்கட்சி தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைச் செயலாளர் ஜெரால்டு என்பவரின் ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய ஜெரால்டு, விசிகவின் கொடிக்கம்பம் அமைப்பதற்கே தான் பெரும் போராட்டத்தை சந்தித்ததாகவும், இதனால் தன்னை கட்சியில் இருந்து குடும்பத்தார் விலகச் சொன்னதாகவும் கண்ணீர் மல்க உரையாற்றினார்.

இதனை தொடர்ந்து பேசிய,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், விடுதலை சிறுத்தை கட்சியானது தமிழகத்தை தாண்டி ஆந்திரா,கேரளா, கர்நாடகா,தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வளர்ச்சி பெற்று வருவதாகவும், சனாதானத்தை எதிர்க்கிற பேரியக்கமாகவும், உண்மையான அம்பேத்கர் பெரியார் ஆகியோரின் இயக்கமாக அரசியல் களத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது எனவும்தெரிவித்தார்.

மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் அமைப்பதற்கு நெருக்கடி வருவது என்பது தமிழகத்தில் 30 ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற பிரச்சினை எனவும் அதனை எல்லாம் கடந்து, விசிக தற்போது மைய நீரோட்ட அரசியலில் நிலைத்து நிமிர்ந்து நிற்கிறது எனவும் தெரிவித்தார். அது மட்டுமின்றி, மற்ற கட்சி கொடிகள் பறக்கின்ற இடத்தில் விசிக கொடி பறப்பது என்பது பெரிய யுத்தமாக உள்ளது எனவும் அதையெல்லாம் கட்டுப்பாடான முறையில் கடந்து தான் ஆக வேண்டும் எனவும் தொண்டர்களுக்கு தொல்.திருமாவளவன் அறிவுறுத்தினார்.

இது ஒருபுறம் இருக்க, இந்தியாவில் உயர் சாதியில் பிறந்தவர்கள் என பேசி கொள்பவர்கள் கூட அரசியலமைப்பு சட்டத்தை எழுத முடியவில்லை எனவும், ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த புரட்சியாளர் அம்பேத்கர்தான் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியதாகவும் பெருமிதம் தெரிவித்த தொல். திருமாவளவன், இன்றைக்கு அவர் எழுதிய சட்டத்தை படித்துதான் வழக்கறிஞர்கள் வாதாடி பிழைப்பு நடத்துவதாகவும், நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி சம்பளம் பெறுவதாகவும் தெரிவித்தார்.

ஆனால், அந்த நீதிமன்றங்களில் அம்பேத்கரின் திருவுருவப் படத்தை வைக்கக்கூடாது என சிலர் கூறிவருவது வேடிக்கையாக உள்ளது எனவும் திருமாவளன் அப்போது கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இதையெல்லாம் கடந்து, எல்லாக்காலங்களிலும் நாம் வெற்றி பெறுவோம் எனவும் அவர் தொண்டர்களுக்கு நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா, விசிக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் குழந்தை வள்ளுவன், ஒன்றிய செயலாளர் முத்துராஜ், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கருணாநிதி, கனிமொழி குறித்து அவதூறு பேச்சு - பாஜக மாவட்டத் தலைவர் கலிவரதன் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.