ETV Bharat / state

'என்னது ரூ.1000 தாரீங்களா, இந்தா உடனே வாறேன்' என்று நம்பி சென்ற மூதாட்டியின் கம்மல் அபேஸ்!

author img

By

Published : Jul 12, 2023, 5:53 PM IST

தென்காசியில் மகளிர் உரிமைத் தொகை பெற்று தருவதாகக் கூறி மூதாட்டியிடம் நகை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tenkasi-jewelry-snatched-from-an-old-woman
தென்காசி:மகளிர் உரிமை தொகை பெற்று தருவதாக கூறி மூதாட்டியிடம் நகை பறிப்பு!

தென்காசி:மகளிர் உரிமை தொகை பெற்று தருவதாக கூறி மூதாட்டியிடம் நகை பறிப்பு!

தென்காசி: மாதா கோவில் தெருவில் வசித்து வரும் கல்யாணி (வயது 81) என்ற மூதாட்டி, அவர் வீட்டின் அருகே அமர்ந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த மர்மநபர் அவரிடம் பேசுவதுபோல் பேசி, அவரது குடும்ப நிலை குறித்து விசாரித்துள்ளார்.

அப்போது மூதாட்டியின் வறுமையை உணர்ந்த மர்ம நபர் 'யார் ஆதரவும் இல்லாமல் தனியாக இருந்து வருகிறீர்கள்' எனக் கூறி, 'தமிழக அரசால், தற்போது மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் இத்திட்டத்தில் சேர விண்ணப்பிக்க வேண்டும்' எனக் கூறவே, 'என்னது ஆயிரம் ரூபாய் தருவாங்களா, இந்தா உடனே வாரேன். அப்ளை பண்ணிடலாம்' எனக் கூறியபடி மூதாட்டி, அந்த மர்மநபருடன் சென்றுள்ளார்.

அப்போது அந்த மர்மநபர் மூதாட்டியிடம், ''ஆயிரம் ரூபாய் கவர்மென்ட் கொடுக்கனும்னா, நாம ஒன்னும் இல்லாத மாதிரி காட்டிக்கிடனும். ஆகையால், போட்டோ எடுக்கும்போது இந்த கம்மல் எல்லாம் இருந்துச்சுன்னா, இந்த பாட்டி வசதியா இருக்கும்னு நினைச்சு தர மாட்டாங்க' எனக் கூறியுள்ளார். உடனே, அந்த மூதாட்டியும் தனது காதில் இருந்த கம்மலை கழற்றி, தான் வைத்திருந்த பையில் வைத்துள்ளார்.

இந்த நிலையில், மூதாட்டியை போட்டோ எடுப்பதற்காக அழைத்துச் சென்ற மர்ம நபர், அவரை ஸ்டுடியோவில் விட்டுவிட்டு, ஆயிரம் ரூபாய் வாங்க விண்ணப்பப்படிவம் வாங்கி வருவதாக கூறிச் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அந்த மர்ம நபர் வராததால், மூதாட்டி பதற்றத்தில் கண்ணீர் சிந்திய படி சாலையில் நீண்ட நேரமாக பரிதவித்து நிற்கவே, அருகே இருந்தவர்கள் என்ன நடந்தது என மூதாட்டியிடம் கேட்டுள்ளனர். அப்பொழுது, நடந்த சம்பவத்தை மூதாட்டி அழுதபடி கூறவே, உடனே அங்கிருந்தவர்கள் மூதாட்டியின் உடைமைகளை சோதனை செய்தபோது, மூதாட்டியின் கம்மலை மர்ம நபர் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து தென்காசி போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து , போலீசார் தற்போது விசாரணை நடத்தி வரும் சூழலில், தென்காசி நகரின் மையப் பகுதியில் நடைபெற்ற இந்த புதுவிதமான மோசடி சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நம் நாட்டில் மோசடி என்பது நாளுக்கு நாள் வித்தியாசமான முறையில் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறிப்பாக, இது போன்ற மோசடியில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக போலீசார் பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும், பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வுடன் செயல்படாவிட்டால் இந்த மோசடியை முற்றிலும் தடுப்பது என்பது நடைபெறாத காரியம் என்று தான் சொல்ல முடியும்.

இதையும் படிங்க :போலி ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்... இளைஞர்களே, இளம்பெண்களே உஷார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.