ETV Bharat / state

தென்காசி திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் மாற்றம்!

author img

By

Published : Jul 26, 2023, 9:28 AM IST

Updated : Jul 26, 2023, 10:51 AM IST

தென்காசி திமுக தெற்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றிய சிவபத்மநாதனை அதிரடியாக மாற்றம் செய்து சுரண்டை நகரச் செயலாளராக செயல்பட்டு வந்த ஜெயபாலன் என்பவரை தென்காசி தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.

தென்காசி திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் மாற்றம்
தென்காசி திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் மாற்றம்

தென்காசி: தென்காசி திமுக தெற்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றிய சிவபத்மநாதனை அதிரடியாக மாற்றம் செய்து, சுரண்டை நகரச் செயலாளராக செயல்பட்டு வந்த ஜெயபாலன் என்பவரை திமுக தெற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.

தென்காசி திமுக தெற்கு மாவட்டச் செயலாளராக வழக்கறிஞர் சிவபத்மநாதன் செயல்பட்டு வந்தார். மணிப்பூர் விவகாரத்தில் பாஜக அரசின் மெத்தனமான போக்கை கண்டித்து தமிழக முழுவதும் திமுக மகளிர் அணி சார்பாக நேற்று முன்தினம் (ஜூலை 24) போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஜூலை 23ஆம் தேதி திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து மணிப்பூரில் நடந்த வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தென்காசி மாவட்டம் பகுதியில் திமுக சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவபத்மநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட திமுக மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் கண்டன உரை ஆற்றினார்.

அப்போது குறுக்கிட்ட மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி, தென்காசியில் திமுகவில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனவும், தாங்கள் மணிப்பூர் சம்பவத்தை குறித்து பேச வேண்டாம் எனவும், மாவட்டச் செயலாளருக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டு குற்றம் சாட்டினார். இதில் மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் ஆதரவாளருக்கும், மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் ஆதரவாளருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் தமிழ்ச்செல்வி ஆர்ப்பாட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வாக்குவாதம் செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆனது. சமீப காலமாக தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்தில் உட்கட்சி பூசல் நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, நேற்றைய தினம் தென்காசியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்தும் மாவட்ட செயலாளருக்கும், மாவட்ட ஊராட்சி தலைவிக்கு இடையே நடந்த மோதல்கள் குறித்தும் கேட்டிருந்தார் என கூறப்படுகிறது. நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறி தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனை அப்ப பொறுப்பில் இருந்து விடுவிக்க திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கனிமொழி பரிந்துரை செய்துள்ளார்.

இதனை அடுத்து மாவட்டச் செயலாளராக பணியாற்றி சிவபத்மநாதன் மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக சுரண்டை நகரச் செயலாளராக செயல்பட்டு வந்த ஜெயபாலன் என்பவரை தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளராக நியமித்துள்ளதாக திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: விசிக கொடிக்கம்பம் அமைப்பதற்கே பெரும் யுத்த போராட்டம்: கண்ணீர் வடித்த கட்சி நிர்வாகி.!

Last Updated : Jul 26, 2023, 10:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.