ETV Bharat / state

மேட்டூர் ஊர் பெயரை மாற்ற எதிர்ப்பு - தென்காசி அருகில் கிராம மக்கள் கருப்புக்கொடி போராட்டம்!

author img

By

Published : Mar 23, 2023, 6:57 PM IST

தென்காசி அருகே ஊர் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Protest against changing the name of Mettur town
மேட்டூர் ஊர் பெயரை மாற்ற எதிர்ப்பு

ஊர் பெயரை மாற்ற கிராம மக்கள் எதிர்ப்பு

மேட்டூர்: தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்தின் கீழ் வெய்காலிப்பட்டி, மேட்டூர், ஆசீர்வாதபுரம், கானாவூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இதில் மேட்டூரின் ஒரு பகுதியை சபரிநகர் என்று பெயர் மாற்றம் செய்ய, திமுக ஊராட்சி தலைவர் பொன்ஷீலா பரமசிவன் நடவடிக்கை எடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

ஊராட்சி செயலர் மூலம் மேட்டூர் பகுதிக்கு சபரிநகர் என்று வீட்டு தீர்வை ரசீது தயார் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து மேட்டூர் கிராம பொதுமக்கள் நேற்று (மார்ச் 22) நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர்.

இந்நிலையில் இன்று (மார்ச் 23) வீடுகள், கடைகள், தெருக்களில் கருப்புக்கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். தங்கள் ஊரின் பெயரை மாற்றக் கூடாது என்றும், திமுக ஊராட்சி தலைவர் பொன்ஷீலாவை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அதிரடிப்படை காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் எந்தவிதமான அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். தங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என மேட்டூர் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மேட்டூர் கிராம மக்கள் கூறுகையில், "மேட்டூர் கிராம எல்லையில் திடீரென சபரிநகர் என பெயர் பலகை வைக்கப்பட்டது. அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். மேட்டூர் எல்லையில் இருக்கும் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சபரிநகர், வெய்காலிப்பட்டி என்ற பெயரில் போலி ரசீது கொடுத்துள்ளனர்.

ஊர் பெயரை மாற்றி வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகைகளை அப்புறப்படுத்த வேண்டும். ஊரின் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் எங்கள் போராட்டம் தொடரும்'' என்றனர்.

ஏற்கனவே இந்தப் பிரச்சினை தொடர்பாக ஊர் மக்கள் மயானத்தில் குடியேறி ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், வட்டாட்சியர் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், 2 முறை சிறப்பு கிராம சபை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. 3-வது முறையாக நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, கையெழுத்திடாமல் கிராம மக்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.

இதையும் படிங்க: ராகுல் சிறை...ரயில் மறியலில் ஈடுபட்ட கே.எஸ். அழகிரி - நக்கலடித்த அண்ணாமலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.