ETV Bharat / state

அமைச்சர் ஆய்வுக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் காக்க வைக்கப்பட்டனரா? உதயநிதி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2023, 12:43 PM IST

Udhayanidhi Stalin visit Tenkasi district
தென்காசி மாவட்டத்திற்கு உதயநிதி வருகை மாற்றுத் திறனாளிகளை மணிக்கணக்கில் காக்க வைத்த மாவட்ட நிர்வாகம்

Udhayanidhi Stalin visit Tenkasi district: தென்காசியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள் பெற வந்த மாற்றுத்திறனாளிகளை 3 மணி நேரம் காக்க வைத்த மாவட்ட நிர்வாகத்தினரை அமைச்சர் கண்டிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஆய்வுக் கூட்டத்திற்கு வருகை தந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளைத் திறந்து வைத்ததுடன் அங்கிருந்த அரங்கு காட்சிகளை பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் 478 பயனாளிகளுக்கு 35 கோடியே 68 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர் துரை ரவிசந்திரன், வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை ஒட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கிற்கு புதிய வர்ணங்கள் பூசப்பட்டு வளாக சாலைகளில் மணல்களை நிரப்பிச் சமப்படுத்தப்பட்டது.

ஆட்சியர் அலுவலக நுழையு வாயில் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களால் அலங்கரிக்கப்பட்டுக் கூடுதலாக அலங்கார வளைவில், முதலாவதாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படமும் அதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு இரண்டாவதாகவும், கடைசியாக முதலமைச்சர் ஸ்டாலின் படமும் வைக்கப்பட்டு இருந்தது.

உண்ணக்கூடிய பழங்களை வைத்து அலங்கரிக்கப்பட்ட நுழைவு வாயில் நிகழ்ச்சி முடிந்த சற்று நேரத்திலேயே மக்கள் ஒட்டு மொத்தமாகப் பழங்களை பறித்துச் சென்றனர். மேலும், கூட்ட அரங்கில் சுய உதவிக் குழு சார்பில் அமைக்கப்பட்ட அரங்கங்களுக்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழு பெண்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

முன்னதாக, 10 மாற்றுத் திறனாளிகளுக்கு 88 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மூன்று சக்கர வாகனம் வழங்கப்படுவதாக அழைத்து வரப்பட்டிருந்தனர். ஆனால் அதற்கு முன்னதாக, ஆய்வுக்கூட்டம் ஆரம்பித்த நிலையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த மாற்றுத் திறனாளிகள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

மேலும், மாவட்ட நிர்வாகத்தினரின் அலட்சியப் போக்கால், மாற்றுத் திறனாளிகளைக் காக்கச் செய்த சம்பவம் குறித்து அமைச்சர் கண்டிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதையும் படிங்க: முடிவுக்கு வந்தததா பல்லடம் 4 பேர் படுகொலை விவகாரம்? - போலீசார் பாதுகாப்புடன் உடல்கள் நல்லடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.