ETV Bharat / state

தென்காசியில் கொட்டும் கனமழை... பேரிடர் மீட்புப் படை விரைவு - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தகவல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 8:14 AM IST

Updated : Dec 18, 2023, 4:40 PM IST

தென்காசி மாவட்டத்திற்கு பேரிடர் மீட்பு படை வருகை
தென்காசி மாவட்டத்திற்கு பேரிடர் மீட்பு படை வருகை

Tenkasi Rain: வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளத் தென்காசி மாவட்டத்திற்கு மாநில பேரிடர் மீட்புப் படையினர் இன்று வருகை தர உள்ளனர் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி

தென்காசி: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல சுழற்சி நிலவும் காரணமாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (டிச.18) தென்காசி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே மழை பாதிப்புகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழக முதலமைச்சர் மேற்கண்ட மாவட்டங்களுக்கு தனித்தனியாக அமைச்சர்கள் மற்றும் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து மழை பாதிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து எவ்வளவு மழை பெய்துள்ளது, அணைக்கட்டுகளில் எவ்வளவு தண்ணீர் திறந்துள்ளோம், மழை பாதிப்பு எவ்வளவு, எத்தனை மழை பாதிப்பு முகாம்கள் திறக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட ஆட்சியருடன் கலந்தாலோசித்து பணியாற்றி வருகிறோம்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 250 மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்திற்கு மாநில பேரிடர் மீட்புப் படையினர் இன்று வருகை தர உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு திறக்கப்படவுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்திலும் எச்சரிக்கையாக உள்ளோம்.

அதைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் உள்ள 4 அணைகளும் திறக்கப்பட்ட உள்ள நிலையில், கரையோரம் உள்ள மக்களைப் பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோல், பேரிடர் காலங்களில் பொதுமக்களைத் தங்க வைப்பதற்காக நெல்லையில் 19 முகாம்களும், கன்னியாகுமரியில் 4 முகாம்களும், தூத்துக்குடியில் 2 முகாம்களும், தென்காசியில் 1 முகாமும் அமைக்கப்பட்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கனமழை எதிரொலி: தென்காசி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.18) விடுமுறை..அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு!

Last Updated :Dec 18, 2023, 4:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.