ETV Bharat / state

தென்காசி அருகே பெண் யானை உயிரிழப்பு!

author img

By

Published : May 29, 2021, 8:05 PM IST

தென்காசி அருகே பெண் யானை உயிரிழப்பு
தென்காசி அருகே பெண் யானை உயிரிழப்பு

தென்காசி : அடவி காடு பகுதியில் உணவு தேடி வந்த யானை ஒன்று பாறையில் இருந்து வழுக்கி விழுந்து உயிரிழந்தது.

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான புளியரை வனப்பகுதி, தமிழ்நாடு - கேரள மாநில எல்லைப் பகுதியாக இருந்து வருகின்றது. கேரளாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலங்களில் ஏராளமான யானைகள் உணவு தேடி, கூட்டம் கூட்டமாக தமிழ்நாடு வனப் பகுதிக்குள் நுழைகின்றன. அவை, புளியரை, மேக்கரை, வடகரை, பூலாங்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் தோட்டங்களில் உள்ள தென்னை, வாழை, மா, பலா உள்ளிட்டவைகளை சேதப்படுத்திச் செல்கின்றன.

இந்நிலையில், தென்காசி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உணவு தேடி வந்த பெண் யானை பாறையில் வழுக்கி விழுந்து, அடவிக்காடு எனும் தனியார் தோட்டத்தின் அருகில் இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து தனியார் தோட்ட உரிமையாளர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் செங்கோட்டை, புளியரை வனத்துறையினர் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். ஆய்வில் அது பத்து வயது மதிக்கத்தக்க பெண் யானை என தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து உதவி மாவட்ட வனத்துறை அலுவலர் தலைமையில் இன்று (மே.29) யானை உடற்கூராய்வு செய்யப்பட்டு ஜேசிபி வாகனம் கொண்டு அரசு முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. தற்போது, யானைகள் அடிக்கடி மின்வேலிகளில் சிக்கி அடிபட்டு உயிரிழப்பதும் அதிகரித்து வருகின்றது. வனப்பகுதிகளில் யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : அடுத்த இரண்டு நாள்களில் எங்கெங்கு மழை பெய்யும்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.