ETV Bharat / state

"பல்நோக்கு சேவை மைய திட்டத்தை கைவிட வேண்டும்" - கூட்டுறவுத்துறை சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 2:20 PM IST

cooperatives
பல்நோக்கு சேவை மையத்திட்டத்தினை கைவிடக் கோரி கூட்டுறவுத்துறை சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மாநிலத் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் கூட்டுறவுத்துறை சார்பாக இணை பதிவாளரிடம் மனு கொடுத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் பல்நோக்கு சேவை மையத்திட்டத்தினை கைவிடக் கோரி வலியுறுத்தப்பட்டது.

கூட்டுறவு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசி: தென்காசி மாவட்டம், தமிழ்நாடு மாநிலத் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் கூட்டுறவுத்துறை சார்பாக நேற்று இணை பதிவாளரிடம் மனு கொடுத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த மனுவில், "தமிழ்நாடு முழுவதும் 4,350 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும், 150 நகர கூட்டுறவு சங்கங்களும் உள்ளன. இதில் சுமார் 2000 கூட்டுறவு கடன் சங்கங்கள் மட்டுமே லாபத்தில் செயல்படுகின்றன. கடந்த 2021ஆம் ஆண்டு வழங்கப்பட்ட விவசாய பயிர் கடன் தள்ளுபடி, 40 கிராமுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி மற்றும் மகளிர் குழு கடன் தள்ளுபடிகள் அரசால் அறிவிக்கப்பட்டன.

இந்த தள்ளுபடி கூறிய தொகை அரசிடம் இருந்து முழுமையாக வழங்கப்படாமல் உள்ளது. அதனால் லாபத்தில் செயல்பட்டு வந்த பெரும்பாலான சங்கங்கள் நஷ்டத்தில் செயல்பட்டு வருகின்றன. தற்போது கூட்டுறவு கடன் சங்கங்களின் பல்நோக்கு சேவை மையம் மூலம் விவசாய உபகரணங்களான டிராக்டர், நெற்கதிர் அறுக்கும் இயந்திரம், கரும்பு வெட்டும் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களை பல லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வாடகைக்கு விட வேண்டும் என்று கூட்டுறவுத்துறை மூலமாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அனைத்து சங்கங்களும் இந்த திட்டத்தில் ஏதாவது ஒரு பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது. பல்நோக்கு சேவை மையம் என்ற பெயரில் சங்க வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கு பதிலாக விவசாயிகள் நேரடியாக பயன்பெறும் வகையில் மத்திய கால கடனை குறைந்த வட்டியில் வழங்கலாம்.

மேலும், அனைத்து சங்கங்களும் இந்த திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் என்பதை கைவிடக் கோரி விவசாயக் கருவிகளை மண்டல இணை பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு வருகிற அக்.3 ஆம் தேதி முதல் தொடர் விடுப்பு போராட்டம் நடத்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு பணியாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் சித்திரை, பொதுச்செயலாளர் காளிதாசன், மாவட்ட பொருளாளர் சண்முக சாமி, கௌரவ பொதுச்செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்ட துணைத்தலைவர் ஹரிகரன், மாவட்டத் துணைத்தலைவர் செந்தூர்பாண்டியன், மாவட்ட இணை செயலாளர் வேலம்மாள் முத்தையா, மாவட்ட போராட்ட குழு தலைவர் சமுத்திர பாண்டியன், மாவட்ட போராட்ட குழுச் செயலாளர் சௌந்தரராஜன், மாவட்ட ஆலோசனை குழு தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:"முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை பதவியிறக்கம் செய்யக்கூடாது" - ராமதாஸ் வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.