ETV Bharat / state

வெகுவிமரிசையாக நடந்த சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா!

author img

By

Published : Jul 31, 2023, 9:39 PM IST

Updated : Jul 31, 2023, 10:44 PM IST

Etv Bharat
Etv Bharat

aadi thabasu 2023: சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்பட்டது. திருவிழாவில் பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா

தென்காசி: சங்கரன்கோவிலில் தென்னகத்தில் பிரசித்திபெற்றதும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலமுமான சங்கர நாராயண சுவாமி திருக்கோவில் உள்ளது. இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் ஆடித்தபசு திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்தக் கோயிலில் முன்னொரு காலத்தில் சிவன், விஷ்ணு இருவரில் யார் பெரியவர் என்ற சர்ச்சை சங்கன்-பதுமன் என்ற இரு பக்தர்களிடையே ஏற்பட்டது. அப்போது இருவரும் ஒருவரே என்று காட்சி அளிக்க வேண்டி இந்த திருத்தலத்தில் உள்ள கோமதி அம்பாள் ஒற்றை காலில் தவம் புரிந்து இருந்தார்.

அம்பாளின் வேண்டுகோளை ஏற்று சங்கரலிங்க சுவாமி தனது உடலின் வலது புறத்தை சிவனாகவும், இடது புறத்தை விஷ்ணுவாகவும் மாற்றி சங்கரநாராயண சுவாமியாக பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இந்த புராண நிகழ்வே ஆடித்தபசு திருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த 2023ஆம் ஆண்டுக்கான விழா கடந்த 21ஆம் தேதி கோமதி அம்மன் சந்நிதியில் உள்ள கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தினந்தோறும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் தீபாராதனை நடத்தப்பட்டு வீதி உலாவும் நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (ஜூலை 31) ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு காலையில் சுவாமி-கோமதி அம்பாளுக்கு விழா பூஜையும், தொடர்ந்து உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகளும் நடத்தப்பட்டது.

தொடர்ந்து சங்கரநாராயணசுவாமி ரிஷப வாகனத்தில் கோமதி அம்மாளுக்கு தபசு காட்சி நல்கினார். இந்த விழாவைக் காண தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, மதுரை உள்ளிட்டப் பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இவ்விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் மண்டகப் படிதாரர்களும் செய்திருந்தனர். மேலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சங் தலைமையிலான 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விநோத கோயில் திருவிழா; கிடா வெட்டி சமபந்தி விருந்தில் பங்கேற்ற 5000 பக்தர்கள்!

Last Updated :Jul 31, 2023, 10:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.