ETV Bharat / state

சென்னை - கொல்லம் விரைவு ரயிலில் விரிசல்..! அலார்ட்டான ரயில்வே ஊழியர்கள்.. பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

author img

By

Published : Jun 5, 2023, 5:39 PM IST

கொல்லம் சென்னை விரைவு ரயிலில் விரிசல்
கொல்லம் சென்னை விரைவு ரயிலில் விரிசல்

கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில்பெட்டியில் ரயில்வே ஊழியர்களால் பெரிய விரிசல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மாற்று பெட்டி அமைத்ததனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

கொல்லம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்பெட்டியில் ஏற்பட்ட விரிசலை கண்டுபிடித்து சரி செய்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு

தென்காசி: கொல்லம்-சென்னை இடையே இயக்கப்படும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் (Chennai - Kollam Express Train) பெட்டியில் பெரிய விரிசல் இருந்தது இன்று (ஜூன் 5) ரயில்வே ஊழியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், ஏற்பட இருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 2ஆம் தேதி ஒடிசா பாலாசோர் பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில், யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் உள்ளிட்ட மூன்று ரயில்கள் மோதியதால் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 260-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த விபத்தைத் தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பயங்கர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் சிறியதாக பாதிப்புக்குள்ளானவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார் என்று குறிப்பிடத்தக்கது.

மீட்பு பணிகள் முடிந்த நிலையில், தமிழக பயணிகள் யாரும் பெருமளவில் பாதிக்கப்படவில்லை என்பதனை தமிழக அரசு உறுதிசெய்துள்ளது. மேலும், இந்த துயர சம்பவத்திற்கு நாட்டின் பல அரசியல் கட்சித்தலைவர்கள் என அனைவரும் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். இந்த சம்பவத்தை இந்த நூற்றாண்டின் கோர விபத்தாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த துயர சம்பவத்தின் தாக்கம் குறைவதற்குள் அடுத்ததாக, தமிழகத்தில் இதேபோல நடக்கவிருந்த மற்றொரு அசம்பாவிதம் ரயில்வே துறையினரால் தவிர்க்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் கேரளா இடையே தினந்தோறும் தொழில் ரீதியாகவும் சுற்றுலா ரீதியாகவும் ரயில் சேவைகள் அதிகளவில் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து சென்னைக்கு தினந்தோறும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல், இன்றும் கொல்லம் - சென்னை இடையே விரைவு ரயில் இயக்கப்பட்டது. கொல்லம் - சென்னை இடையே இயக்கப்படும் இந்த விரைவு ரயிலானது செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்தபோது, வழக்கம்போல் செங்கோட்டை ரயில் நிலையத்தில் வைத்து ரயில்வே ஊழியர்கள் ரயிலை சோதனை செய்தனர்.

அப்போது S3 Coach-ன் அடியில் சக்கரம் அருகே பயங்கர விரிசல் உள்ளதை லோ பைலட் பார்த்துள்ளார். உடனடியாக, இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, செங்கோட்டை ரயில் நிலையத்தில் வண்டியில் பயணம் செய்த பயணிகளை இறக்கி விட்டு விரிசல் ஏற்பட்ட பெட்டி கழற்றி விடப்பட்டது.

பின்னர், பயணிகளை மாற்று பெட்டியில் ஏற்றி பயணத்திற்கு ஏற்பாடு செய்தனர். இதனால், நிகழவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தற்போது ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தமிழகத்தில் ரயில் பெட்டியில் விரிசல் ஏற்பட்டதை கவனித்து அதனை சரி செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரயில் தண்டவாளத்தில் லாரி டயர் வைத்த வழக்கில் 8 பேரிடம் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.