ETV Bharat / state

சேறு பூசி ஆட்டம் பாட்டத்துடன் புலிக்குத்தும் வேட்டை! 200 ஆண்டுகளாக நடைபெறும் பாரம்பரிய திருவிழா!

author img

By

Published : Apr 12, 2023, 7:02 AM IST

200 ஆண்டுகளாக நடைபெறும் பாரம்பரிய திருவிழா
200 ஆண்டுகளாக நடைபெறும் பாரம்பரிய திருவிழா200 ஆண்டுகளாக நடைபெறும் பாரம்பரிய திருவிழா

சிங்கம்புணரி எஸ்.புதூர் அருகே பங்குனி பொங்கல் விழாவையொட்டி சேறு பூசி, ஆட்டம் பாட்டத்துடன் 200 ஆண்டுகளாக நடைபெறும் பாரம்பரிய திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

200 ஆண்டுகளாக நடைபெறும் பாரம்பரிய திருவிழா

சிவகங்கை: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் குரும்பலூர் கிராமத்தில் செகுடப்பர் கோயில் பங்குனி பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் இத்திருவிழாவில் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரின் ஆட்டம் பாட்டத்துடன் இத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற நேர்த்தி கடன் வைத்து சுவாமி வேடங்கள், எமதர்மன், கிழவன், கிழவி, குறவன், குறத்தி என்றும் குழந்தை வரம் வேண்டுவோர் வைக்கோல் பூதம் என பல்வேறு வேடங்களில் வந்து தங்களது நேர்த்தி கடன்களை இத்திருவிழாவில் செலுத்தினர். இவ்வாறு இவர்கள் வேடம் அணிந்து செகுடப்பர் சுவாமியை வேண்டினால் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.

மேலும் இதனால் கிராமத்தில் உள்ள அனைவரும் எந்த ஒரு நோய் நொடி வருவதில்லை எனவும் மற்றும் கிராமத்தில் நல்ல மழை பொழிந்து விவசாயம் நன்றாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் இக்கிராமத்திற்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் மஞ்சள் மற்றும் கருப்பு கலர்களில் பொட்டு வைத்து வரவேற்கின்றனர். மேலும் பக்தர்கள் இங்கு இருக்கும் சுவாமிக்கு இரும்பு, ஈயம், வெள்ளி போன்ற பொருள்களில் வேல் காணிக்கை செலுத்துகின்றனர்.

செகுடப்பர் சுவாமிக்கு பெண்கள் மாவிளக்கு வைத்தும், கரும்பு தொட்டில் எடுத்தும் வழிபட்டனர். தொடர்ந்து மாலை நேரத்தில் நடைபெற்ற புலி குத்தும் நிகழ்வு என்கிற விழா நடைபெற்றது. இதில் குரும்பலூர் சுற்று கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கோவில் முன்பு கூடிய பின்னர் புலி வேடமிட்ட நபரை சாமியாட்டத்துடன் செகுடப்பர் கோயிலுக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அய்யனார் கோயிலில் பக்தர்கள் உடல் முழுவதும் சேறுபூசி ஆட்டம் பாட்டத்துடன் புலிக்குத்தும் வேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வைக்கோல் பூதம் எனும் நிகழ்ச்சியில் குழந்தை வரம் வேண்டி வரும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்புகின்றனர். தொடர்ந்து அய்யனார் மற்றும் சுவாமிக்கு சிறப்பு தீபாரதனைகள் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 200 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் பாரம்பரியமாக இத்திருவிழாவை இக்கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க:மதுரையில் கோயில் திருவிழாவில் சாமியாடிய குழந்தைகள் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.