ETV Bharat / state

கீழடி 9ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை 183 பொருட்கள் கண்டெடுப்பு - தொல்லியல் துறை தகவல்!

author img

By

Published : Jul 8, 2023, 7:57 PM IST

Updated : Jul 8, 2023, 9:12 PM IST

nineth phase of excavation
சிவப்பு நிறப் பானை ஓடுகள்

கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக நடைபெற்று வரும் 9ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை தங்க அணிகலன்கள் உட்பட 183 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகங்கை: திருப்புவனம் தாலுகா கீழடியில் ஒன்பதாம் கட்ட அகழாய்வுப் பணி, கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஒன்பது குழிகளில் அகழாய்வு ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதில் தங்க அணிகலன், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண்ணால் செய்யப்பட்ட விலங்கின உருவகங்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட தக்களிகள், ஆட்டக்காய்கள், வட்டச்சில்லுகள், கண்ணாடி மணிகள், அஞ்சனக் கோல்கள், செப்பு ஊசி, எலும்பினால் செய்யப்பட்ட கூர்முனைகள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணிகள் என 183 தொல்பொருட்கள் இதுவரை வெளிக்கொணரப்பட்டுள்ளன.

கீழடி 9ஆம் கட்ட அகழாய்வு

மேலும், வெவ்வேறு நிலைகளிலிருந்து எலும்பு மற்றும் கரி மாதிரிகள் அறிவியல் பகுப்பாய்விற்குச் சேகரிக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நான்கு அகழாய்வுக் குழிகளில் சுமார் 35 செ.மீ. ஆழத்தில் களிமண் மற்றும் சுண்ணாம்புக் கலவை கொண்டு அமைக்கப்பட்ட தரைத்தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தரைத்தளம் 3 முதல் 6 செ.மீ. தடிமனுடன் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும், இங்கு நடைபெற்ற அகழாய்வில் தரைத்தளத்தின் கீழே சுமார் இரண்டு அடி ஆழத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருப்பு சிவப்பு, சிவப்பு பூச்சு மற்றும் சிவப்பு நிறப் பானை ஓடுகள் குவியலாகக் கண்டறியப்பட்டுள்ளன. துளையிடப்பட்ட பானை ஓடுகள் வண்ணம் தீட்டப்பட்ட பானை ஓடுகள், ரசட் பூச்சுப் பெற்ற பானை ஓடுகள் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட பானை ஓடுகள் மற்றும் ரெளலட்டட் மட்கலன்கள் வகை பானை ஓடுகளும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டன. இப்பானை ஓடுகளை ஆய்வு செய்த போது மீன், ஏணி, மற்றும் வடிவியல் சார்ந்த குறியீடுகள் என நூற்றுக்கும் மேற்பட்ட குறியீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கருப்பு சிவப்பு நிறப் பானை ஓடுகள்
கருப்பு சிவப்பு நிறப் பானை ஓடுகள்

மேலும், கொந்தகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நான்காம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சியில் 10 மீட்டாருக்கு 10 மீட்டர் என்ற அளவில் தோண்டப்பட்ட அகழாய்வுக் குழியில் இதுவரை 17 முதுமக்கள் தாழிகள் மூன்று நிலைகளில் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. தாழிகளின் மேற்பகுதி மட்டுமே வெளிப்பட்டுள்ள நிலையில், முழு பக்கமும் வெளிப்பட்டால்தான் முழு விபரம் தெரியவரும், அகழாய்வு தளங்களில் காணப்படும் எலும்புகள், கரி துகள்கள் உள்ளிட்டவற்றை ஆய்விற்கு அனுப்ப தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த வருடம் நடைபெற்ற அகழ்வாய்வின் போது முதுமக்கள் தாழியொன்றில் கருப்பு சிவப்பு வண்ணம் கொண்ட குவளைகளுடன் 40 செ.மீ நீளமுள்ள இரும்பால் செய்யப்பட்ட வாள் கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வந்தே பாரத் உள்பட அனைத்து ரயில்களில் டிக்கெட் விலை குறைப்பு... ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி..

Last Updated :Jul 8, 2023, 9:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.