ETV Bharat / state

பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலகியது ஏன்? முதன்முறையாக மனம் திறந்த இபிஎஸ்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2023, 11:12 PM IST

Etv Bharat
Etv Bharat

சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டத்தில், பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, 2 கோடி தொண்டர்களின் உணர்வின் அடிப்படையில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முதன்முறையாக மனம் திறந்த இபிஎஸ்

சேலம்: திருவாக்கவுண்டனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் அதிமுக மாநகர் மாவட்ட, சூரமங்கலம் பகுதி, கழகம் ஒன்று மற்றும் இரண்டு பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டத்தில், பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.

கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி பேசுகையில், " பூத் கமிட்டி எந்த அளவுக்கு வலிமையாக உள்ளதோ அந்த அளவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும். பூத் கமிட்டி உறுப்பினர்கள் தங்கள் பகுதியில், தகுதி வாய்ந்த புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். போலி வாக்காளர்களை கண்டறிந்து அவர்களை உடனடியாக நீக்க வேண்டும். தேனீ போல் சுறுசுறுப்பாக செயல்பட்டு நமக்கு கிடைக்கக்கூடிய வாக்குகள் சிந்தாமல், சிதறாமல் கிடைக்க செய்ய வேண்டும். இந்தப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தினால் நமது வேட்பாளர்கள் எளிதாக வெற்றி பெற முடியும்.

இன்றைய ஆட்சியாளர்கள் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில், 90 சதவீதம் நிறைவேற்றதாக கூறுகின்றனர். 10 சதவீதம் கூட அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் மக்களிடம் அழகாக பேசுவார்கள். அதனை பூத் கமிட்டி உறுப்பினர்கள் முறியடிக்க வேண்டும். எதிரிகளும் மூக்கின்மீது விரல் வைக்கும் அளவுக்கு நல்லாட்சியை தந்தது அதிமுக அரசு. இப்போது திமுகவிற்கு வாக்களித்துவிட்டு வேதனைப்பட்டு கொண்டிருக்கிறோம் என்று மக்கள் எங்கு பார்த்தாலும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

வரி அதிகரிப்பு செய்த திமுக: கொரோனா தொற்றுக்காலம் முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கும் இந்த வேளையில், பொதுமக்கள் தலையில் பெரும் சுமையை சுமத்தி உள்ளது திமுக ஆட்சி. மின்சார கட்டணம், வீட்டு வரி, தொழில் வரியை, சமானிய மக்களின் நிலைக்கு அதிகமாக பல மடங்கு உயர்த்தி உள்ளனர். தேர்தல் நேரத்தில் அனைத்து பேருந்துகளிலும் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்று அறிவித்தார்கள். ஆனால் இப்போது அடையாளப்படுத்தப்பட்ட பேருந்துகளில் மட்டுமே செல்ல முடியும் என்ற நடைமுறையை செயல்படுத்தி உள்ளனர். இது ஏமாற்றும் செயலாகும்.

நகை கடனில் திராவிட மாடல் ஆட்சி: தேர்தல் நேரத்தில் அனைவருக்கும் நகை கடன் தள்ளுபடி என்றார்கள். இப்போது தகுதியானவர்களுக்கு மட்டும்தான் என்று கூறுகிறார்கள். திமுக வாக்குறுதியை நம்பி 48 லட்சம் பேர் அவர்களது நகையை அடகு வைத்தனர். அதில் 13 லட்சம் பேருக்கு தான் தள்ளுபடி ஆனது. கிட்டதட்ட 35 லட்சம் பேர் வட்டியுடன் கடனை திருப்பி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. பலர் அந்த நகையை மீட்க முடியாமல் உள்ளனர். இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் அடையாளம்.

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை: அனைத்து குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை என்று கூறிவிட்டு, இப்போது தகுதியானவர்களுக்கு என்று கூறுகின்றனர். 10 ஏக்கர் நிலம், கார் வைத்துள்ளவர்களுக்கு எல்லாம் கொடுத்துள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிடைக்கவில்லை. 12 லட்சம் பேருக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலம் நிதி உதவி வழங்கியது அதிமுக அரசு.120 கோடியில் பிரம்மாண்டமான சட்டக் கல்லூரியை கட்டிக் கொடுத்தது அதிமுக அரசு. திமுக ஆட்சி பொறுப்பேற்று, இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர்கள் என்ன திட்டத்தை தந்துள்ளனர். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தான் திறந்து வைக்கின்றனர்.

அதிகரிக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள்: அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. சட்டத்தின் ஆட்சி நடந்தது. ஆனால் இப்போது, நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, முதியோர்களை கொலை செய்து நகைகளை பறித்து செல்லும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இளைஞர்கள், மாணவர்கள் கஞ்சா போதையினால் சீரழிந்து கொண்டிருக்கின்றனர். இந்த கஞ்சா போதை ஆசாமிகள்தான், அங்கே வன்முறையில் ஈடுபடுவதாக செய்திகள் சொல்கின்றன. இப்படிப்பட்ட அரசாக தான் விடியா தி.மு.க அரசு உள்ளது.

விடியா திமுக அரசு: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கழக நிர்வாகிகள் மீது வழக்கு போடுவது, பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பது, இதுதான் அவர்கள் செய்யும் செயல். அதிமுக ஆட்சியின் போது எதற்கும் துணிந்து போராடப்பட்டு, ஜனநாயக ஆட்சிமுறையாக நடந்தது. இப்போது போராட்டங்களை கண்டு அஞ்சுகின்றனர். அதனை எதிர்கொள்ள திமுக அரசுக்கு தைரியம் இல்லை. மக்களின் போராட்டங்களை தடுத்து நிறுத்துவது ஜனநாயக விரோதம். தேர்தல் நேரத்தில் வழங்கிய பொய்யான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை.இந்த திட்டங்களுக்காக மக்கள் அதனை எதிர்த்து போராடுகின்றனர்.

அதிமுக ஆட்சி தமிழக மக்களை கடனாளியாக வைத்துள்ளது என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினர். திமுக ஆட்சிக்கு வரும்போது, 2021இல் 4 லட்சத்து 35 ஆயிரம் கோடி கடன் இருந்தது. இரண்டரை ஆண்டு திமுக ஆட்சியில் 2 லட்சத்து 73 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளனர். எந்த புதிய திட்டங்களை திமுக செயல்படுத்தி உள்ளது. அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் புதிய சாலைகள், புதிய கல்லூரிகள், கால்நடை பூங்கா, தமிழகம் முழுவதும் பாலங்கள் உள்பட ஏராளமான திட்டங்களை தந்தோம்.
திமுக ஆட்சியில் மக்கள் பயன்பெறும் எந்த திட்டமும் செய்யவில்லை.

கடனில் முதல் நிற்கும் தமிழ்நாடு: நிதி மேலாண்மை குழு, நிபுணர் குழுவும் உருவாக்கினார்கள். இந்தியாவிலேயே கடந்த ஆண்டு அதிகமாக கடன் வாங்கிய மாநிலம் தமிழகம். இந்தியாவிலேயே தமிழகம் எடுத்துக்காட்டான மாநிலம் என்று ஸ்டாலின் பெருமை கூறுகிறார். கடன் வாங்கியதில் தான் தமிழகம் எடுத்துக்காட்டு. அதிமுக ஆட்சி அமைப்பதற்கு முன்பு 2011ல் திமுக விட்டுச்சென்ற கடன் ஒரு லட்சத்து 14 ஆயிரம் கோடி. அதற்கு 10 ஆண்டுகளுக்கான வட்டி ஒரு லட்சம் கோடி அதிமுக செலுத்தியுள்ளது. மொத்தம் 2 லட்சத்து 14 ஆயிரம் கோடி திமுக கடன் பெற்றுள்ளது.

4 லட்சத்து 15 ஆயிரம் கோடியில் திமுக வாங்கிய 2 லட்சத்து 14 ஆயிரம் போய்விட்டால், 10 ஆண்டுகளில் அதிமுக பல்வேறு திட்டங்களுக்கு வாங்கியது 2 லட்சத்து ஒரு ஆயிரம் கோடிதான். 20 ஆயிரம் கோடி மின்சார திட்டத்திற்கு போக ஒரு லட்சத்து 81 ஆயிரம் கோடிதான் அதிமுக தமிழகத்திற்காக வாங்கிய கடன். கொரோனா காலகட்டத்தில் 60 ஆயிரம் கோடி வருவாய் இல்லை. கொரோனா திட்டத்திற்காக 40 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இவற்றை கழித்தால் 10 ஆண்டுகளில் அதிமுக வாங்கியது 81 ஆயிரம் கோடி தான்.

இதனை கொண்டு தான் அத்தனை திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். ஆனால் இரண்டரை ஆண்டுகளில் 2 லட்சத்து 72 ஆயிரம் கோடி கடன் வாங்கி, தமிழக மக்களை கடனாளியாக ஆக்கியது தான் திமுக ஆட்சியின் சாதனை. இந்த பணம் எங்கு போனது என்று தெரியவில்லை. திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் ஊழல். சபரீசனும், உதயநிதி ஸ்டாலினும் முப்பதாயிரம் கோடியை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்றனர் என்று திமுக நிதி அமைச்சரே கூறியுள்ளார்.

வலுக்கும் இந்தியா கூட்டணி: அதனை பாதுக்காக்கதான் இந்தியா கூட்டணியில் சேர்ந்து துடித்துக்கொண்டிருக்கின்றார். இந்தியா கூட்டணி மூலம் அதிகாரத்துக்கு வந்து விட்டால் இந்த பிரச்சனை தீரும் என்று பார்க்கின்றனர். ஆட்சிக்கு வரமுடியாது என்பது வேறு விஷ்யம். திமுக வெற்றி பெறும் என்று கூறவில்லை. இந்தியா கூட்டணி வெற்றிபெறும் என்றுதான் பேசுகிறார். திமுக மீது நம்பிக்கை இல்லை. கூட்டணி மீது தான் நம்பிக்கை வைத்துள்ளார்.

கூட்டணி குறித்த கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எடப்பாடி பழனிசாமி: அதிமுக-வை பொறுத்தவரை, வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பிரமாதமான கூட்டணி அமைக்கப்படும். அதிமுகவில் உள்ள இரண்டு கோடி தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் விதமாக மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்த உணர்வின் அடிப்படையில் பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக முடிவெடுத்தோம். இது இது பொதுச்செயலாளர் முடிவு அல்ல. ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்கள் முடிவு.
விவாத மேடையில் பேசுபவர்கள், எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை என்று கூறிவருவதற்கு முற்றுபுள்ளி வைக்கிறேன்.

ஒரு கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது என்றால் அதுதான் இறுதி முடிவு. அதிமுக, மக்களுக்கு சேவை செய்யும் இயக்கம். ஒடிசா, மேற்கு வங்கம், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பிரதமர் வேட்பாளர்களை அறிவித்துவிட்டதால் தேர்தலை சந்தித்தனர். அதிமுக மாநிலத்தின் உரிமையை காக்க நாடாளுமன்றத்தை தேர்தலை சந்திக்கும். சில நேரத்தில் கூட்டணி வைக்கிறோம். உடன்படாத சில பிரச்சனைகள் இருந்தால்கூட, மக்களின் தேவைக்காக கூட்டணி வைக்கவேண்டிய நிலை. இனி அந்த நிலை இல்லை.

அதிமுக-வை பொறுத்தவரை தமிழக மக்கள் தான் எஜமானர்கள். தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களுக்காக தான் நாங்கள் முடிவெடுப்போம். அவர்கள் எண்ணங்களை நாடாளுமன்றத்தில் பிரதிபலிப்போம். சிறுபான்மை மக்களுக்கு பிரச்சனைகள் வரும்போது முதல் குரல் கொடுப்பது அதிமுகதான். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியை பின்பற்றி மக்களின் ஆதரவை பெற்று 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெரும். மாநில மக்களின் நலனைதான் நாங்கள் பார்க்கின்றோம். தமிழக மக்களின் பாதிப்பிற்கு எந்த திட்டங்களை கொண்டுவந்தாலும் முதலில் எதிர்ப்பது அதிமுக.

அதிமுகவில் உள்ள 2 கோடி தொண்டர்களில் நானும் ஒருவன். உங்களின் எண்ணங்களை பிரதிபலிப்பவன். இந்த கூட்டம் தமிழகம் முழுவதும் பிரதிபலிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் சென்று பூத் கமிட்டி உறுப்பினர்களை சந்தித்து ஆலோசனை வழங்குவேன். அதிமுக பலம் வாய்ந்த கட்சி. 30 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி. அப்படிப்பட்ட கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் வரும்போது, அதிக இடங்களில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் நமது உரிமைக்காக குரல் கொடுக்க நீங்கள் செயல்பட வேண்டும்" என்று கூறினார்.

இந்த கூட்டத்தில் சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் வெங்கடாஜலம், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியன், மாநகர் மாவட்ட அவை தலைவர் பன்னீர்செல்வம், , முன்னாள் சட்டன்ற உறுப்பினர் எம்.கே.செல்வராஜ், சூரமங்கலம் பகுதி கழக செயலாளர்கள் ஏகேஎஸ்எம்.பாலு, மாரியப்பன் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் எனப் பலரும் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: நாட்டின் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு: விவரங்களை வெளியிட்ட பீகார் அரசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.