ETV Bharat / state

சேகோ ஆலைக்கான அனுமதியை ரத்து செய்க - சேலம் அருகே கிராமமக்கள் உண்ணாவிரதம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 9:18 PM IST

Updated : Aug 28, 2023, 9:44 PM IST

Opposition to set up Sago plant in Salem: ஆத்தூர் அருகே தனியார் சேகோ ஆலை (sago plant) அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமமக்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

sago plant
தனியார் ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்க

தனியார் சேகோ ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி உண்ணாவிரதம்

சேலம்: ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான 'சேகோ' எனப்படும் மரவள்ளிகிழங்கு அரவை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதற்காக, ஆலைகள் நிலத்தடி நீரை உறிஞ்சி பயன்படுத்துவதாலும், ஆலைகளில் இருந்து வெளியேறும் நீரை சுத்திகரிக்காமல் கால்வாய்களில் கலப்பதாலும் நீரானது மாசடைந்து காணப்படுகிறது.

இதனால், துர்நாற்றம் ஏற்பட்ட காற்றை சுவாசிப்பதோடு, பல்வேறு வகையான நோய்தொற்றுகளுக்கு ஆளாகி வருவதாக குற்றம்சாட்டியுள்ள அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலரும் இது குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், காட்டுக்கோட்டை ஊராட்சியில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் தனியார் ஆலை அமைக்க, சேலம் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் இசைவாணை வழங்கப்பட்டுள்ளது.

சேகோ ஆலை அமைக்க எதிர்ப்பு: இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமமக்கள் இன்று (ஆக.25) ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தனியார் ஆலை அமைக்கக்கூடாது என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்து ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் சரவணன் கூறுகையில், “முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் காட்டுக்கோட்டை ஊராட்சியில் வாழ்ந்து வருகிறோம் எனவும், இந்த நிலையில் மிகப்பெரிய தனியார் சேகோ ஆலை எங்கள் ஊரில் நிறுவினால், அதிலிருந்து வெளியேறும் கழிவுகள் அருகே உள்ள கல்லாறு, வசிஷ்ட நதி மற்றும் பாசன வாய்க்கால் உள்ளிட்ட நீர் நிலைகளில் கலந்து அந்நீரையும் அவை மாசுபடுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சேகோ ஆலை அமைப்பதற்கான இசைவாணையை திரும்ப பெறுக: இதனால், எதிர்காலத்தில் குடிக்கக் கூட தண்ணீர் கிடைக்காமல் போய்விடும் எனவும், மண்ணை மாசாக்கும் சேகோ ஆலை அமைக்க வழங்கப்பட்ட இசைவாணையை திரும்பப் பெற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இசைவாணையை திரும்ப பெறாவிடில், 'நாங்கள் அனைவரும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் விரைவில் நடத்துவோம்' என்றார்.

மேலும், ஆத்தூர் பகுதியைச் சுற்றி உள்ள விளைநிலங்களில் அரிசி மற்றும் மஞ்சள் போன்ற பல்வேறு பொருட்கள் விளைச்சல் செய்து வருவதால், அதே பகுதியில் செயல்பட்டு வரும் சேகோ ஆலைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யப்படாமல் வெளியேற்றப்படும் கழிவுநீர் நேரடியாக ஆற்றில் விடப்படுகிறது.

இதனால் வசிஷ்ட நதியானது, கழிவுநீர் ஓடையாக மாறிவிட்டதால் வேளாண்மை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு ஏராளமான விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக புதிய சேகோ ஆலை அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, மரவள்ளி கிழங்கு மட்டும் விவசாயம் செய்யக்கூடியவர்கள் புதியதாக அமைய உள்ள சேகோ ஆலைக்கு அனுமதி வழங்க வேண்டும் என மனு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:காவல் துறையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களை குண்டு கட்டாக தூக்கிய காவல் துறையினர்!

Last Updated : Aug 28, 2023, 9:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.