ETV Bharat / state

ஆளுநரை வரவேற்ற சர்ச்சைக்குரிய துணை வேந்தர்.. சேலம் பெரியார் பல்கலை - பிரச்சனை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 4:40 PM IST

Vice Chancellor Jagannathan welcome to Governor RN Ravi at Salem Periyar University creates controversy
பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆளுநருக்கு வரவேற்பு

Salem Periyar University: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு துணை வேந்தர் ஜெகநாதன் வரவேற்பு அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆளுநருக்கு வரவேற்பு

சேலம்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சேலத்திற்குப் பயணம் மேற்கொண்டார். மதியம் ஒரு மணி அளவில் சேலம் விமான நிலையத்திலிருந்து கார் மூலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்த ஆளுநர் ஆர்.என்.ரவியைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது அவருடன் சேர்ந்து நின்ற ஆளுநர், காவல்துறையினர் செலுத்திய மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் துணைவேந்தர் ஜெகநாதன் அறையில் அமர்ந்து அவருடனும் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்களுடனும் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தர் அறையில் இருந்து வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் மதிய உணவு அருந்தினார். தொடர்ந்து அவர் கார் மூலம் கோயம்புத்தூர் புறப்பட்டுச் சென்றார்.

பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன், பூட்டர் என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவி பல்வேறு ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாகத் தொழிலாளர் சங்கத்தினர் உள்ளிட்டோர் அளித்த புகாரின் பேரில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அவர் மீது எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

வழக்கு விசாரணையில் உள்ள போதே அவர் தொடர்ந்து பல்கலைக்கழக பணியை மேற்கொண்டு வருவது கல்வியாளர்கள் மற்றும் அரசியல் அமைப்பினரிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனிடையே கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர், துணைவேந்தர் ஜெகநாதனைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்த தமிழக ஆளுநர் ரவியை, துணைவேந்தர் ஜெகநாதன் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் ஏற்கனவே பனிப்போர் நடந்து வரும் நிலையில் பெரியார் பல்கலைக்கழக விவகாரத்தில் ஆளுநர் துணைவேந்தருக்கு ஆதரவாகச் செயல்படுவது அவரின் வருகை மூலம் தெரிகிறது என பல்கலைக்கழக தரப்பில் பேச்சு எழுந்துள்ளது.

இதையும் படிங்க: அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த தடை; ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.