ETV Bharat / state

பத்திரப் பதிவு துறையில் பகீர் மோசடி.. மௌனம் காக்கும் லஞ்ச ஒழிப்புக் காவல் துறை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2023, 7:16 PM IST

சேலத்தில் பத்திரப் பதிவு துறையில் பகீர் மோசடி
சேலத்தில் பத்திரப் பதிவு துறையில் பகீர் மோசடி

Bribe issue in Salem registrar office : சேலம் மாவட்ட பத்திர பதிவாளராக பணியாற்றி வரும் கனகராஜ் மீது அடுக்கடுக்கான மோசடி புகார்கள் எழுந்துள்ளன. இந்த புகார்கள் பத்திர பதிவுத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம்: சேலம் மாவட்டத்தில் பத்திரப் பதிவாளராக பணியாற்றி வருபவர் கனகராஜ். இவர் மீது சமீபத்தில் அடுக்கடுக்கான மோசடி புகார்கள் குவிந்துள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியின் மாநில தலைவர் பூமொழி கூறுகையில், "சேலம் மாவட்டம் எடப்பாடியை பூர்வீகமாகக் கொண்டவர் கனகராஜ். இவர் தற்போது சேலம் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட (பொறுப்பு) பத்திரப்பதிவாளராகப் பணியாற்றி வருகிறார்.

கனகராஜின் கண்காணிப்பின் கீழ், சேலம் மேற்கில், 1 எண் இணை சார்பதிவாளர், சேலம் (மேற்கு) 3. எண் இணை சார்பதிவாளர், சூரமங்கலம், ஓமலூர், மேச்சேரி, தாரமங்கலம், ஜலகண்டாபுரம், மேட்டூர், மகுடஞ்சாவடி, சங்ககிரி, எடப்பாடி ஆகிய பகுதிகளில் அலுவலகங்கள் உள்ளன.

அதேப்போல், சேலம் கிழ‌க்கு பகுதியில், 1. எண் இணை சார்பதிவாளர், சேலம் (கிழ‌க்கு) அயோத்தியாபட்டணம், தாதகாபட்டி, வீரபாண்டி, வாழப்பாடி, ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளைம், தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி, ஏற்காடு ஆகிய பகுதிகளிலும் அலுவலகங்களும் உள்ளன.

கனகராஜ் 17.10.2020ல் சேலம் சூரமங்கலம் சார்பதிவாளராக பணிபுரிந்தபோது, சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், லஞ்சப்பணம் 2 லட்சத்து 43ஆயிரத்து 830 ரூபாய் கைப்பற்றப்பட்டு, சார்பதிவாளர் கனகராஜ் மீதும் அவர் உடந்தையாளர்கள் மீதும், U/S. 4/AC/2020, 102 of Cr.P.C., 7(a) & 7(A) of Prevention of Corruption (Amendment) Act 2018படி, சேலம் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினரால் குற்ற வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

இந்த வழக்கில் அவருடைய அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் அவரை கைது செய்வதிலிருந்தும், பத்திரப்பதிவுத்துறை அவர்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதிலிருந்தும் தப்பித்துக்கொண்டார். மேலும், சேலம் ரெட்டிப்பட்டி பகுதியைச் சார்ந்தவரும், கொங்குப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான அதிமுக அம்மாசி என்பவர் மூலம் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினருக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தருவதாக பேரம் பேசியதில், அதற்கு லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் ஒத்துவராத நிலையில், அப்பாவி அம்மாசியை லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினரிடம் கைகாட்டிவிட்டு, அவர் நல்லவர் என்பதுபோல தப்பித்துக்கொண்டார்.

அவர்மீது லஞ்ச குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி, திருப்பூர் மாவட்ட பதிவாளராக பதவி உயர்வு பெற்றார். அங்கும் கனகராஜ் லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், திருநெல்வேலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் கனகராஜ், கிருஷ்ணகிரி மாவட்ட (தணிக்கை) பதிவாளராக பொறுப்பேற்றார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கு வீட்டுமனை மதிப்பு நிர்ணயம் செய்தாலும், ஒரு ஏக்கருக்கு மூன்று முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை அல்லது, பத்து பிரிவுகள் கொண்ட மனை பிரிவுக்கு ஒரு பிளாட்டு அவருக்குத் தர வேண்டும் என்று வலியுறுத்தி பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சேலம் மாவட்ட (நிர்வாகம்) பதிவாளராக இருந்த மணிவண்ணன், தூத்துக்குடிக்கு மாறுதல் செய்யப்பட்டார். இதை அவருக்கு சாதமாகப் பயன்படுத்திகொண்ட கனகராஜ் மீண்டும், சேலம் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாக பதிவாளர் (பொறுப்பு) பதவியில் அமர்ந்து கொண்டார். நியாயப்படி இந்த பதவிக்கு, சேலம் மாவட்ட பத்திரப்பதிவாளர் (தணிக்கை) கவிதா மேற்கு மாவட்டத்திற்கும், கிழக்கு மாவட்டத்திற்கு கல்பனாவும் தான் பொறுப்பு பதவிகளுக்கு வந்திருக்கவேண்டும். இவர்கள் இருவரையும் ஓரம் கட்டி, மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய இரண்டிற்கும் சேர்த்து கனகராஜ் பதவிக்கு வந்துள்ளார்.

சேலம் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாக பதிவாளராக (பொறுப்பு) பதவிக்கு வருவதற்கு முன்பே அதாவது, கிருஷ்ணகிரியில் அதிகாரியாக இருந்தபோதே, சேலம் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலக பகுதியிலும் அவருக்கு நெருக்கமான புரோக்கர்கள் மூலம் வில்லங்க பத்திரங்களை பதிவு செய்ய வைத்து, முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் தப்பகுட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தப்பகுட்டை தங்கம் என்கின்ற தங்கராஜூ, இந்துமதி, கன்னந்தேரி கிராம நிர்வாக அலுவலர் குப்புசாமி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் மண்டல துணை வட்டாட்சியர் மேகநாதன் ஆகியோர் மூலம், சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி குப்பாண்டிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே, ஜெயமுருகா எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் பத்திர எழுத்தர் அலுவலகத்தை நடத்தி வந்தார். அதில், தப்பக்குட்டை தங்கத்திற்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக, தப்பக்குட்டை தங்கத்தை விலக்கிவிட்டார்.

தற்போது சேலம் மாவட்ட மேற்கு மற்றும் கிழக்கு பத்திரப்பதிவு (பொறுப்பு) பதவிக்கு வந்தபிறகு, தப்பக்குட்டை தங்கத்தின் அலுவலகத்திற்கு அருகிலேயே, கனராஜுக்கு இந்துமதி, கனகராஜின் சகோதரி மகன் சூர்யா, எடப்பாடி வட்டாட்சியர் சிவராஜ், எருமைப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ராமசாமி, வைகுந்தம் கிராம நிர்வாக அலுவலர் மணி, கன்னந்தேரி கிராம நிர்வாக அலுவலர் குப்புசாமி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் மண்டல துணை வட்டாட்சியர் மேகநாதன் ஆகியோர் மூலம், X Weys Documentation Center என்ற பெயரில், ஆவண எழுத்தர் அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார்.

கனகராஜின் ஆவண எழுத்தர் மேகநாதன், திருப்பூர் மாவட்டம் பல்லடம் மண்டல துணை வட்டாச்சியராக பணியாற்றிபோது, பட்டா மாற்றுதலுக்கு விண்ணப்பித்த நபரிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட புகாரில், லோகநாதன் மீது திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், V&AC Cr.No. 4/2021/AC/TPR U/S 7 of PC Act 1988 as Amendment by 7of PC (Amendment) Act 2018ன் படி 02.07.2021ல் லஞ்ச குற்ற வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் லோகநாதன் சஸ்பெண்ட்-ம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணியிலிருந்த சேலம் வேம்படிதாளத்தைச் சார்ந்த சீனிவாசன், கனகராஜுடன் 17.10.2020 அன்று லஞ்ச வழக்கில் சிக்கியவர். இந்த சீனிவாசனும் கனகராஜின் வலது கரமாக செயல்படுகிறார். தற்போது சேலம் சூரமங்கலம் பகுதியில், ஆவண எழுத்தர் அலுவலகத்தை கனகராஜின் பேராதரவுடன் நடத்திவருகிறார் சீனிவாசன். இது மட்டும் அல்லாமல் கனகராஜ், டி.என்.பி.எஸ்.இ. கோச்சிங் சென்ட்டர் நடத்தி வந்த நிலையில், அவரது சென்ட்டரில் பயின்று தேர்வாகி, தற்போது அரசு பதவிகளில் இருப்பவர்கள் மூலமும் பல்வேறு ஆதாயங்களை அடைந்து வருகிறார்.

சொந்த மாவட்டமான சேலத்தில், ரியல் எஸ்டேட் புரோக்கர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் என அவரது வட்டத்தில் உள்ள அனைவரையும் பயன்படுத்திக்கொண்டு, அவரது பதவி ஆளுகைக்குக் கீழுள்ள சேலம் கிழக்கு மற்றும் மேற்கு பத்திரப்பதிவு மாவட்டத்திற்கு உட்பட்ட சார்பதிவாளர்கள் யாரெல்லாம் இவருக்கு அடிபணிந்து, இவர் சொல்லும் பத்திரங்களை பதிவு செய்கிறார்களோ, அவர்களுக்கு சகல வாய்புகளும் செய்துகொடுக்கிறார் கனகராஜ்.

இவர் சொல்லும் பத்திரங்களை எந்த சார்பதிவாளர் பதிவு செய்ய மறுக்கிறாரோ, அவரை நேரடியாகவும், தொலைபேசி வாயிலும் மன ரீதியாகத் துன்புறுத்தியும், பத்திரப்பதிவு டிஐஜி, ஐஜி உள்ளிட்ட உயரதிகாரிகளிடம் தவறானக் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தும், அவர்களை இடமாறுதல் செய்தும், அவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கைகள் பாயவும் காரணமாக உள்ளார். உயரதிகாரியான கனகராஜை பகைத்துகொண்டால், துறை ரீதியிலான பிரச்சினைகள் வரும் என்பதால், இவரால் பாதிக்கப்பட்ட சார்பதிவாளர்கள் கண்ணீரும் கம்பலையுமாக உள்ளனர்.

கனகராஜ் மீது 17.10.2020ல் போடப்பட்ட லஞ்ச குற்ற வழக்கின் குற்றப்பத்திரிக்கையை இதுநாள் வரை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல், மௌனம் காக்கின்றனர் லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர். லஞ்ச குற்றவழக்கு நிலுவையிலுள்ள நிலையில், குறுகிய காலத்தில் உயர் பதவிக்கு வந்த கனகராஜ் மீது, தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், சேலம் மாவட்டத்தில் பல்வேறு முறையற்ற, சட்டவிரோத பத்திரப்பதிவுகள் நடைபெற வாய்ப்புகள் உண்டு. இதனால், சட்டவிரோத பத்திரப்பதிவில் சேலம் மாவட்டம் முதன்மை மாவட்டமாக மாறும் அபாயமும் உண்டு.

தமிழக பத்திரப்பதிவுத் துறையில் மிகச்சிறப்பாக செயல்படும் அமைச்சர் மூர்த்தி, துறைச் செயலாளர் ஜோதி நிர்மலா சாமி ஆகியோரிடம் அவர் நெருக்கமாக இருப்பதுபோல கூறிக்கொண்டு, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, பத்திரப்பதிவு செயலாளர் ஜோதி நிர்மலா சாமி ஆகியோரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறார் கனகராஜ். எனவே, பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் கனகராஜ் மீது, காலதாமதமின்றி உரிய விசாரணை மேற்கொண்டு அவர்மீது நடவடிக்கை எடுத்து சேலம் மாவட்ட பத்திரப்பதிவுத்துறையை காப்பாற்ற, தமிழக அரசு முன்வர வேண்டும்" என்றுத் தெரிவித்தார்.

இது குறித்து தெளிவான விளக்கம் பெற கனகராஜை பலமுறை தொடர்பு கொண்டும், முறையான விளக்கமளிக்க மறுப்பு தெரிவித்து வருகிறார் பத்திரப்பதிவுத்துறை அதிகாரி கனகராஜ். இது குறித்து கனகராஜின் தரப்பில் இருந்து விளக்கங்கள் பதிவாகும் பட்சத்தில் அவரின் விளக்கமும் பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: அனைத்து மாவட்டங்களிலும் சிறிய ஜவுளி பூங்கா: அமைச்சர் காந்தி வெளியிட்ட தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.