ETV Bharat / state

ஓமலூர்-பரமத்தி வேலூர் சாலை விரிவாக்கம்: விளைநிலத்தை கையகப்படுத்துவதை நிறுத்த மனு

author img

By

Published : Jul 23, 2021, 7:08 PM IST

சேலம்: ஓமலூர் - பரமத்தி வேலூர் சாலை விரிவாக்கம் செய்ய ஏராளமான சிறு, குறு விவசாயிகளின் விளைநிலங்களைத் தமிழ்நாடு அரசு கையகப்படுத்துவதை நிறுத்திட வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

farmers
farmers

சேலம் மாவட்டம் ஓமலூர் - பரமத்தி வேலூர் சாலையை அகலப்படுத்தும் திட்டத்திற்காக, கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில், நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

ஏற்கெனவே கொங்கணாபுரம் பகுதிகளில் ஒரு வழித்தடம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புறவழிச்சாலை அமைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள், அப்பகுதியில் சுமார் 50 ஏக்கர் விளைநிலத்தை அளந்து எல்லைக் கற்கள் அமைத்துள்ளனர்.

இதனால் வேதனை அடைந்த பாதிக்கப்பட்ட கொங்கணாபுரம் விவசாயிகள் இன்று (ஜூலை 23) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாதிக்கப்பட்ட விவசாயி செல்வநாயகம் கூறியதாவது, "ஓமலூர் - பரமத்திவேலூர் சாலையைப் புறவழிச் சாலை அமைப்பதற்காக கொங்கணாபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் குறிப்பாக எருமைப்பட்டி கிராமம் வழியாகச் சாலை அமைக்கப்பட்டுவருகிறது.

இதனால் இந்தப் பகுதியில் சுமார் 50 ஏக்கர் நிலம் பாதிக்கப்படுவதோடு நூற்றுக்கணக்கான, பழமையான மரங்கள் வேரோடு வெட்டி வீழ்த்தப்படுகிறது. அதே பகுதியில் உள்ள நீர்நிலைகள் அழிக்கப்படுகின்றன. பல்வேறு கோயில்கள் இடிக்கப்படும் ஆபத்து உள்ளது.

விளை நிலத்தில் விவசாயம் செய்த அனைத்துப் பயிர்களும் பாதிக்கப்படுவதால் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு, விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில், ஒருபோதும் வேளாண் நிலம் பாதிக்கப்பட அனுமதிக்க மாட்டோம் என்று வாக்குறுதி அளித்துள்ள நிலையில், தற்போது புறவழிச்சாலை அமைக்க விளைநிலத்தை கையகப்படுத்துவது வேதனையாக இருக்கிறது.

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் சேலம் - சென்னை எட்டு வழிச் சாலையைத் தடுத்து நிறுத்தி, பல ஆயிரம் ஏக்கர் விளைநிலத்தைக் காப்பாற்றியதுபோல, இதில் சிறப்பு கவனம் செலுத்தி கொங்கணாபுரம் வட்டார விவசாயிகள் வாழ்வாதாரத்தைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மின்மாற்றி பழுதால் 150 ஏக்கர் விளைநிலம் சேதம்: உழவர்கள் வேதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.