ETV Bharat / state

கொடநாடு பங்களாவிலிருந்து எடுக்கப்பட்ட 5 பைகள்.. ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் பரபரப்பு வாக்குமூலம்..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2023, 4:45 PM IST

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொடநாடு வழக்கு
மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொடநாடு வழக்கு

Kodanadu Murder Case: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் என்னையும் விசாரிக்க வேண்டும் என்று கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால் சிபிசிஐடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொடநாடு வழக்கு

சேலம்: கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி, கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை முயற்சி நடந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறை வழக்கு பதிவு செய்து பலரை விசாரித்து வந்தனர். விசாரணையின் பின் நாட்களில் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநர் கனகராஜ் மர்மான முறையில் சாலை விபத்தில் இறந்தார். இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விரைந்து தீர்வு காண வேண்டும் என அரசியல் கட்சிகள் கடந்து பொதுமக்கள் மத்தியிலும் குரல்கள் எழத்தொடங்கியுள்ளது. இதனையடுத்து தற்போது, கனகராஜின் அண்ணன் தனபால், கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க வேண்டும் என்று சமீபத்தில் கூறி இருந்தார். தற்போது அந்த வழக்கில் என்னையும் விசாரிக்க வேண்டும் என்றும், அவரது தம்பி விபத்தில் இறப்பதற்கு முன்பாக கொடநாடு கொலை மற்றும் கொள்ளை குறித்து அவரிடம் முக்கிய ரகசியங்களை பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக சேலம் நாட்டாண்மை கட்டட வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தனபால் கூறுகையில், "கொடநாடு பங்களாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 5 பைகளை கொண்டுதான் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். அந்த பைகளில் முக்கியமான ஆவணங்கள் இருந்தது என்று என் தம்பி கனகராஜ் என்னிடம் தெரிவித்துள்ளார். சிபிசிஐடி விசாரணைக்கு ஒத்துழைக்க நான் முற்றிலும் தயார். என்ன நடந்தது என்பதை எந்த நேரத்திலும் சொல்ல தயாராக உள்ளேன். தமிழ்நாடு காவல்துறையை விட சிபிசிஐடி போலீசார் விசாரணையை துரிதமாக நடத்தி வருகின்றனர்.

என்னை யாரும் இயக்கவில்லை. நான் தனியாகத்தான் இயங்குகிறேன். கொடநாடு பங்களாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 5 பைகள், சேலத்தில் எடப்பாடி பழனிசாமியின் மைத்துனரான வெங்கடேசனிடம் 3 பைகளும், சேலம் புறநகர் அதிமுக மாவட்டச் செயலாளர் இளங்கோவனிடம் 2 பைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த 5 பைகளில் தான் அனைத்து முன்னாள் அதிமுக அமைச்சர்களின் முக்கிய ஆவணங்கள் உள்ளது.

கனகராஜ் விபத்தில் இறந்ததாக கூறப்பட்ட இடத்தில் ரத்தம் சிந்தி உறைந்து போய் இருந்தது. அது தொடர்பாக விசாரணையில் எந்த தகவலும் இல்லை. விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் ஓட்டுனர் கைது செய்யப்படவும் இல்லை. கனகராஜ் விபத்து குறித்து ஏற்கனவே என்னிடம் போலீசார் நடத்திய விசாரணையில், உயர் அதிகாரிகள் என்னை அடித்து துன்புறுத்தினர். 100 கிலோ எடை இருந்த நான் தற்போது 60 கிலோ எடையில் இருக்கிறேன்.

கோவை சரக டிஐஜி உள்ளிட்ட அதிகாரிகள் பலர், என்னுடைய குடும்பத்தை பற்றி தவறாக பேசி என்னையும் அவமானப்படுத்தினர். விசாரணையின் போது அவர்கள் என்னென்ன வார்த்தைகளை பயன்படுத்தி என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்கள் என்றும் எப்படியெல்லாம் என்னை அடித்து துன்புறுத்தினார்கள் என்பது குறித்து சிபிசிஐடி விசாரணையில் தெளிவாக கூற விரும்புகிறேன்" என்று கண்ணீர் மல்க தனபால் தெரிவித்தார்.

மேலும் கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, எடப்பாடி பழனிச்சாமியின் மைத்துனர் வெங்கடேசன், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆகிய 5 பேரை விசாரிக்க வேண்டும் எனவும் தனபால் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: ஜெயலலிதா மரண வழக்கில் தீவிரம் காட்டும் நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு புது உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.