ETV Bharat / state

எட்டப்பர்களுக்கு அதிமுகவில் இடம் இல்லை - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2023, 4:51 PM IST

Etv Bharat
Etv Bharat

Edappadi Palaniswami speech about verdict: அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இது நீதிக்கும், தர்மத்திற்கும், உண்மைக்கும் கிடைத்த தீர்ப்பு என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம்: அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை அடுத்து சேலம் மாவட்டம், எடப்பாடியில் உள்ள சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்தார்.

மேலும், சிலுவம்பாளையம் இல்லத்திற்கு அருகில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,' அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பினால் நீதி, தர்மம், உண்மை வென்றுள்ளதாகவும், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை நீதிமன்றம் அங்கீகரித்துள்ளதாகவும் கூறி மகிழ்ந்தார்.

கனகராஜை ஜெயலலிதாவின் ஓட்டுநர் என்றால் வழக்குதான்: அதிமுக சட்டத்தின் ஆட்சி நடத்தியதாகவும், இதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார். தனபால் எப்படிப்பட்டவர், அவர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். இன்றைய ஆட்சியாளர்களே விசாரணைக்கு அழைத்து சென்று மூன்று மாதங்கள் சிறையில் அடைத்தனர். நில அபகரிப்பில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வந்தவர் அவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் என்று கனகராஜை இனியாரும் சொல்லக்கூடாது. அவர் சசிகலாவின் ஓட்டுநராக இருந்தவர். மீறி ஜெயலலிதாவின் ஓட்டுநர் என கூறினால் நீதிமன்றத்தின் வழியாக வழக்கு தொடர்வோம் என்றார். கனகராஜ் ஒருபோதும் ஜெயலலிதாவுக்கு ஒருநாள் கூட ஓட்டுனராக கனகராஜ் இருந்தவர் இல்லை. ஒரு குற்றவாளியை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கார் ஓட்டுநராக இருந்தார் என்று கூறுவது தவறு எனத் தெரிவித்தார்.

கோடநாடு வழக்கு நீதிமன்றத்தில் சட்டரீதியாக நடைபெற்று வருகிறது. அதைப்பற்றி பேசுவதே தவறு, நீதிமன்றத்தில் வழக்கு இருப்பவர்கள் மீது பேசுவது வழக்கிற்கு குந்தகம் விளைவித்து விடும் என்றார். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒன்பது மாதங்கள் இருக்கிறது. தேர்தலுக்கான அடிப்படை பணிகளை மேற்கொண்டு வருகிறோம். பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறோம். மதுரையில் 'அதிமுக எழுச்சி மாநாடு' மிகச்சிறப்பாக நடைபெற்றது.

தென்மாவட்டத்தில் நடத்த முடியாது என்று கூறினார்கள். ஆனால், 15 லட்சம் பேர் கலந்துகொண்டு தமிழக வரலாற்றில் எந்த ஒரு கட்சிக்கும் இதுபோன்ற தொண்டர்கள், கழக நிர்வாகிகள், மக்கள் கலந்து கொண்டதாக சரித்திரம் இல்லை. அந்த அளவிற்கு வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டை நடத்தி காட்டியதாக பெருமிதம் கொண்டார். இனியாரும் அதிமுக இரண்டாக, மூன்றாக சென்றுவிட்டது எனக் கூறவேண்டாம், ஒன்றாக இருக்கிறது என்று மாநாட்டின் மூலம் நிரூபித்து காட்டியுள்ளதாக ஈபிஎஸ் தெரிவித்தார்.

சந்திராயன் -3 வெற்றி; விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள்: நீதிமன்றம், தேர்தல் ஆணையம் உள்ளிட்டவைகள் மூலமாக தீர்ப்பு பெற்றுவிட்டோம். அதிமுக எங்கள் தரப்பில் இருக்கிறது என்பது முழுமையாக உறுதிப்படுத்தி உள்ளோம். அதிமுக செய்தியை சிந்தாமல் சிதறாமல் போடுங்கள். சந்திராயன் -3 தரை இறங்கியது நாட்டிற்கு கிடைத்த வெற்றி. தமிழக விஞ்ஞானிகள் மற்ற நாட்டை சேர்ந்தவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபணம் ஆகி உள்ளது. இந்தியா வல்லரசு நாடாக உயர்வதற்கு இது அடித்தளமாக அமைந்துள்ளது. இதற்கு தமிழகத்தை சேர்ந்த ஒருவர் முன்னே நின்று நிகழ்வை நிகழ்த்தியுள்ளார். அதிமுக சார்பாக அவருக்கு பாராட்டு தெரிவித்து விட்டோம். தமிழகத்தை சேர்ந்தவர் ஒருவர் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். இது இந்தியாவிற்கு கிடைத்த பெருமை ஆகும்.

எட்டப்பர்களுக்கு அதிமுகவில் இடம் இல்லை: அதிமுக கட்சிகொடியை பயன்படுபவர்கள் குறித்த கேள்விக்கு இனி ஒவ்வொன்றாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். எல்லோரும் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பார்கள் என்று கருதுகிறோம். ஒரு சிலரை தவிர்த்து அதிமுகவிற்காக உழைத்தவர்கள் பிரிந்து சென்றிருந்தால், கட்சிக்குள் வர நினைத்தால் இணைத்துக் கொள்வோம். சிலர் கட்சியின் ரீதியாக வளர்ந்து அதிகாரத்திற்கு வந்து எப்படி இருக்கிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும். அப்படி வளர்ந்தவர்கள் கட்சிக்கு துரோகம் விளைவித்துள்ளனர். இன்றைய ஆளும் கட்சியுடன் சேர்ந்து அதிமுகவை கெடுக்க நினைத்தவர்கள், அழிக்க நினைத்தவர்கள், எட்டப்பராக செயல்பட்டவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை.

அதிமுக தொண்டர்கள் நிறைந்த கட்சி. தொண்டராக நின்று தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.அதிமுகவில் 2 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பணியாற்றி வருகின்றனர். இரண்டு கோடி தொண்டர்களில் ஒருவன் நான். அப்படிதான் நானும் செயல்பட்டு வருகிறேன்.அதிமுக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி பெறும். இதில் எந்த மாற்றமும் கிடையாது' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் - உணவு பரிமாறி மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர் ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.