ETV Bharat / state

"மக்களவைத் தேர்தல் முடிவுக்காக இப்போதே அஞ்சும் பாஜக" - சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா!

author img

By

Published : Aug 16, 2023, 9:43 PM IST

salem
கோப்புப்படம்

மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து பாஜகவுக்கு இப்போதே அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும், இதனை மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி கட்சிகள் புரிந்து கொண்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

சேலம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் சேலத்தில் கடந்த 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டம் நாளை (ஆக.17) வரை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள இன்று (ஆக.16) சேலம் வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

கானல் நீரான ரூ.15 லட்சம்: அப்போது பேசிய அவர், "நாட்டின் சுதந்திர தின நாளில் பேசிய பிரதமர் மோடி, தேர்தல் கால பிரசாரத்தைப் போல பேசி உள்ளார். இதன் மூலம் தேர்தல் களம் உருவாகி இருக்கிறது. நாட்டில் கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் நாடு நிலைகுலைந்துள்ளது. மூன்றாவதாக பிரதமராக வந்தால் மூன்றாவது வலிமையான பொருளாதாரமிக்க நாடாக மாறும் என அவரே மார் தட்டி பேசி கொள்கிறார். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்குவோம் என்றும், கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவேன் என்றும் அவர் அளித்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. அந்த வாக்குறுதிகள் என்னவானது என்பது குறித்து மக்கள் கேட்கின்றனர். அவர் வார்த்தை ஜாலங்களில் ஈடுபட்டு, கள சூழலில் மக்கள் படும் அவதிக்கு பொறுப்பான பதில் எதுவும் சொல்லவில்லை.

மணிப்பூர் உள்நாட்டு கலவரத்தில் (Manipur Violence) சிக்கி தவிப்பதோடு, பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். மணிப்பூருக்கு பிரதமர் மோடி போவது போல தெரியவில்லை. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். அங்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டுமெனில், முதலமைச்சர் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும். இதற்கு பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தயாராக இல்லை.

மதச்சார்பற்ற கட்சிகள் கூட்டம்: பாஜகவினர் மக்களை பிளவுபடுத்தி தேர்தல் காலத்தில் அரசியல் லாபம் தேட பார்க்கின்றனர். மக்களிடம் அமைதியும், இணக்கமும் உருவாக வேண்டும் என்பது பாஜகவுக்கு குறிக்கோளாக இல்லை. நாட்டில் அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு பாஜக அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட வேண்டும் என்ற பொது கருத்து அகில இந்திய அளவில் வலுவாக உருவாகி உள்ளது. பாஜகவை விரட்டும் வகையில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதச்சார்பற்ற கட்சிகள் (INDIA - Indian National Developmental Inclusive Alliance) ஒன்றுபட்டுள்ளன. இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. அடுத்து மூன்றாவது கூட்டம் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1-ல் மும்பை நகரில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு கூட்டத்திலும் கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு, கலந்து பேசுதல், தேர்தல் கால பிரச்னைகளை அணுகுதல் என்று பல்வேறு வகையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு அதிர்ச்சி: இந்தியா கூட்டணியின் மும்பை கூட்டம் பற்றி பல எதிர்பார்ப்புகள் உருவாகி உள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு அதிர்ச்சியும், ஆற்றாமையும் ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து பாஜகவினருக்கு இப்போதே அச்சம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் தெரிவிக்கும் புள்ளிவிவரங்கள் தவறாக உள்ளன. பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுக்கு இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மக்களை பிளவுபடுத்தி மோதலை உருவாக்கி தேர்தல் வாய்ப்புகளை பெருக்கி கொள்ளலாம் என நினைக்கின்றனர். மக்களோடு சேர்ந்து செயல்படும் கட்சியாக அது போன்றதொரு சம்பவம் நடைபெறாது. பாஜக வீழ்த்தப்பட வேண்டும்.

அடுத்த பிரதமர் யார்?: மாற்று ஆட்சி அமைக்கிறபோது எல்லா கட்சியினர் இணைந்த இந்தியா கூட்டணியால் பிரதமர் யார்? என்பதைத் தேர்ந்தெடுக்க முடியும். கடந்த காலங்களில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் போது அதுபோன்றதொரு தலைமையைத் தேர்ந்தெடுத்தோம். தலைமை என்பது பிரச்னை அல்ல. இந்தியா கூட்டணியின் சார்பில் தலைமையை உருவாக்க முடியும். இப்போது பெரும்பான்மை பலத்துடன் உள்ள பாஜக பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை ஏன் கொண்டு வரவில்லை? பெண்களை அவமானப்படுத்துகின்றனர். அவர்களுக்கு நியாயமான உரிமைகள் மறுக்கப்படுகிறது. இதை பிரதமர் மோடி விளக்க வேண்டும்.

உழைப்பாளர்கள் குறித்த பெயர் மாற்றம் எதற்கு?: விவசாயிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் எதிரான சட்டங்களை கொண்டு வந்தனர். விவசாயிகள் என்று சொல்லாமல், உற்பத்தி செய்பவர்கள் என கூறுகிறார். ஆனால், அவர் மறைமுகமாக குறிப்பிட்டது அதானி, அம்பானியைதான். அமைப்பு சார்ந்த, அமைப்பு சாராதவர்கள் பற்றி பேசாமல் இந்தியக் குற்றவியல் சட்டம் உள்ளிட்டவைகளை பெயர் மாற்றம் செய்கின்றனர். இந்த விவகாரத்தில் வழக்கறிஞர்கள், சட்ட நிபுணர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இது மொழிப் பிரச்னை மட்டுமல்ல, உள்ளார்ந்த பிரச்னை என வழக்குரைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாட்டில் கடுமையான சட்டங்களை பயன்படுத்தும் அரசாக பாஜக உள்ளது.

ஆளுநரை அகற்ற வலியுறுத்துவதன் காரணம்: தமிழக ஆளுநர் அகற்றப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுபவராக அவர் இல்லை. யார் அதிகாரத்தில் இருக்கிறார்களோ? அவர்களுக்கு கெடுபிடியாக செயல்படுபவராக ஆளுநர் உள்ளார். ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு கொண்டு வருகிற சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டியவர். முடிவெடுக்க வேண்டிய பொறுப்பில் இல்லை என்பதை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தை ஆளுவது யார்? என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்தான். இதை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும். அதனால்தான், ஆளுநர் அகற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: "2024ல் செங்கோட்டையில் அல்ல, வீட்டில்தான் கொடி ஏற்றுவார் மோடி" - கார்கே பதிலடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.