ETV Bharat / state

காமராஜரின் ‘காவேரி தண்ணீரே தெய்வம்'... நெகிழ வைக்கும் பதினெட்டுபட்டி கிராமங்கள்!

author img

By

Published : Mar 22, 2023, 9:22 PM IST

காமராஜரின் ‘காவேரி தண்ணீரே தெய்வம்'... நெகிழ வைக்கும் பதினெட்டுபட்டி கிராமங்கள்!
காமராஜரின் ‘காவேரி தண்ணீரே தெய்வம்'... நெகிழ வைக்கும் பதினெட்டுபட்டி கிராமங்கள்!

சேலம் அருகே உள்ள பவளத்தனூர் கிராமத்தில் இடம் பெற்றுள்ள 'காவேரி தண்ணீரே தெய்வம்' என்ற கல்வெட்டு குறித்த செய்தித் தொகுப்பை காணலாம்.

சேலம் அருகே உள்ள பவளத்தனூர் கிராமத்தில் இடம் பெற்றுள்ள 'காவேரி தண்ணீரே தெய்வம்' என்ற கல்வெட்டு

சேலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்து உள்ள குறுக்கப்பட்டி ஊராட்சியில் பவளத்தானூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் ஒரு பானை தண்ணீருக்காக பவளத்தானூர் மக்கள், பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று கிணறுகள் மற்றும் இதர நீர் நிலைகளில் இருந்து தண்ணீரைக் கொண்டு வந்து பயன்படுத்தி வந்துள்ளனர்.

எனவே, இந்த குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க வலியுறுத்தி கிராம பஞ்சாயத்து மூலமாக மாவட்ட நிர்வாகத்திற்கு கிராமத்து மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த அப்போதைய மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் காமராஜர், கோரிக்கை வந்த சில வாரங்களில் குடிநீர் குழாய் அமைத்து கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல், அந்த குடிநீர் குழாயை நேரில் சென்று திறந்து வைத்து குடிநீர் சேவையை வழங்கி உள்ளார்.

இவ்வாறு மேட்டூரில் இருந்து வரும் காவேரி தண்ணீர், குழாய் வழியாக பவளத்தானூர் மக்களின் தாகத்தை இன்றளவும் தீர்த்து வருகிறது. மேலும் இதன் சிறப்பு என்னவென்றால், அந்த குடிநீர் குழாய் அருகில் கட்டப்பட்டுள்ள சிமெண்ட் சுவற்றில் 'காவேரி தண்ணீரே தெய்வம்' என்ற வாசகம் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. இதை திறந்து வைத்தவரும், அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் காமராஜர்தான்.

மேலும் இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி அகல்யா கூறுகையில், “எங்கள் பகுதியில் அந்த காலத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு இருந்தது. இதனை அறிந்த அன்றைய முதலமைச்சர் காமராஜர், 1954ஆம் ஆண்டில் உடனடியாக எங்கள் கிராமத்திற்கு குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இந்த குடிநீரால் அன்றில் இருந்து இன்று வரை பதினெட்டுபட்டி சுற்று வட்டார மக்கள் அனைவரும் இந்த குடிநீரைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த குடிநீர் சேவை எங்களது உயிர் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. அந்த குடிநீர் குழாய் கல்வெட்டில் 'காவேரி தண்ணீரே தெய்வம்' என்ற வாசகம் இடம் பெற்றிருக்கிறது. இன்றோ, உலக தண்ணீர் தினம். எங்கள் கிராமங்களுக்கு தண்ணீர் பஞ்சத்தை போக்கிய காமராஜர் அவர்களுக்கு இன்றைய உலக தண்ணீர் தினத்தில், எங்கள் கிராம மக்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.

மேலும் உலக தண்ணீர் தினமான இன்று, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், இன்று (மார்ச் 22) தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று தண்ணீர் வசதி உள்பட தங்களது அடிப்படைத் தேவைகளை கோரிக்கைகளாக முன் வைத்தனர்.

இதையும் படிங்க: பாரம்பரிய அறிவாளிகளே 'மடையர்கள்' - உலக தண்ணீர் தினத்து நாயகர்கள் ஓர் பார்வை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.