ஒமைக்ரானை ஒழிக்க வேப்ப மரத்திற்குத் திருமணம் செய்துவைத்த கிராம மக்கள்!

author img

By

Published : Dec 9, 2021, 6:01 PM IST

ஒமைக்ரான் பாதிப்பு உறுதி

ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் இருக்கவும், உலக நன்மைக்காகவும் அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் ராணிப்பேட்டையில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் திருமணம் செய்துவைத்தனர்.

ராணிப்பேட்டை: டெல்டா, டெல்டா பிளஸ் என்று பல வகையான உருமாற்றங்களைப் பெற்ற கரோனா வைரஸ் தற்போது ஒமைக்ரான் என்ற புதிய உருமாற்றத்தைப் பெற்றுள்ளது. ஆப்பிரிக்கா நாடுகளில் முதலில் கண்டறியப்பட்ட இந்த வகை தொற்று தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது.

இந்தியாவில் தற்போதுவரை 23 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தொற்றைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் சூழலில், ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே கிராம மக்கள் நூதன முயற்சியில் ஈடுபட்டனர்.

அரச மரத்திற்கும் - வேப்ப மரத்திற்கும் திருமணம்

கலவையை அடுத்த மேட்டு முள்ளுவாடி கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த ஸ்ரீபொன்னியம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டு மாபெரும் குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர் ஒமைக்ரான் தொற்றுப் பரவலைத் தடுத்திடவும், கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வேண்டியும், உலக நன்மைக்காகவும் அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்துவைக்க முடிவுசெய்தனர்.

கோயில் வளாகத்தில் பந்தக்கால் நட்டு வாசலில் வாழை மரம், தோரணங்கள் கட்டி கோயிலை அலங்கரித்து ஊர் பொதுமக்கள் சீர்வரிசையுடன் ஊர்வலமாகக் கொண்டுவந்து, வேத மந்திரங்கள் முழங்க ஊர் பெரியவர்கள் குமார், பொன்னன் ஆகிய இருவரும் தாம்பூலம் மாற்றிக் கொண்டனர். பின்னர் வேதபண்டிதர் சௌந்தரராஜன் வேப்ப மரத்திற்குத் தாலி கட்டினார்.

அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்துவைத்த கிராம மக்கள்

இதையடுத்து மகா தீபாரதனை நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜை செய்த புனித நீர் இரண்டு மரங்கள் மீதும் தெளிக்கப்பட்டது. பின்னர் ஊர் பெரியவர்கள் திருமணத்திற்கு வந்தவர்கள் என அனைவரும் மொய்ப் பணம் வைத்தனர். திருமணம் நடைபெற்று முடிந்ததும் ஊர் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

இது குறித்து ஊர் பொதுமக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் இளைஞர்கள் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டுவந்தனர். மேலும் ஒமைக்ரான் நோய்ப் பரவிவருவதால் அதைத் தடுக்க வேண்டி வேப்ப மரத்திற்கும், அரச மரத்திற்கும் திருமணம் செய்துவைத்தோம் என்றனர். இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: பிபின் ராவத் மறைவு நாடாளுமன்றத்தில் இரங்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.