ETV Bharat / state

நகைக்கடை ஷட்டரில் துளை... சிசிடிவி வயர் கட்... 9 கிலோ தங்க நகைகள் கொள்ளை... பகீர் பின்னணி

author img

By

Published : Feb 10, 2023, 6:22 PM IST

Etv Bharat நகை கடை ஷட்டரை உடைத்து திருட்டு
Etv Bharat நகை கடை ஷட்டரை உடைத்து திருட்டு

சென்னையில் நகைக்கடையின் ஷட்டரை உடைத்து 5 கோடி ரூபாய் மதிப்பிலான 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற கும்பலை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நகை கடை ஷட்டரை உடைத்து திருட்டு

சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை பூர்வீகமாக கொண்டவர், ஸ்ரீதர் (36). இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்து சென்னை பெரம்பூரில் உள்ள பேப்பர் மில்ஸ் சாலையில் ஜே.எல் என்ற பெயரில் நகைக்கடை தொடங்கினார். இரண்டு மாடிகள் கொண்ட கட்டடத்தில் முதல் தளத்தில் நகைக்கடையும், இரண்டாம் தளத்தில் ஸ்ரீதர் தனது குடும்பத்துடனும் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று (பிப்.9) இரவு நகைக்கடையில் வியாபாரம் முடிந்து ஊழியர்கள், கடையைப் பூட்டி சாவியை ஸ்ரீதரிடம் கொடுத்துச் சென்றனர். பின்னர் இன்று (பிப்.10) காலை 9 மணியளவில் வழக்கம்போல ஸ்ரீதர் கடையை திறப்பதற்காக சென்ற போது, கடையின் முன்பக்க ஷட்டர் வெல்டிங் மிஷினால் வெட்டப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

நகை கடை ஷட்டரை உடைத்து திருட்டு
நகை கடை ஷட்டரை உடைத்து திருட்டு

பின்னர், கடையின் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கர் கதவை மிஷினால் வெட்டப்பட்டு, அதிலிருந்த 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், அங்கு சில நகைகள் கீழே சிதறி கிடந்துள்ளன.

இதையடுத்து, அந்த திருட்டு கும்பல் யார் என்பதை அறிய, ஸ்ரீதர் சிசிடிவி காட்சியை பார்க்கச் சென்றார். ஆனால், சிசிடிவி வயரை அறுத்துவிட்டு, ஹார்டு டிஸ்கையும் திருடிச்சென்றது தெரியவந்தது. இதனால், அதிர்ந்துபோன ஸ்ரீதர், இது குறித்து திரு.வி.க நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார்.

உடனே, வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யபாரதி, புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவு வரவழைக்கப்பட்டு திருடர்களின் கைரேகைப் பதிவுகளை சேகரித்தனர். இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவு இரண்டு மணிக்கு இன்னோவா காரில் வந்த கும்பல் ஒன்று நகைக் கடைக்குள் புகுந்து திருட்டுச் சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த காவல் துறை கூடுதல் ஆணையர் அன்பு, 'இன்று அதிகாலை நகைக்கடையில் ஷட்டர் வெல்டிங் மூலம் அறுத்து 9 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வந்தது. சம்பவ இடத்தில் கைரேகைப் பதிவுகள், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள்' எனத் தெரிவித்தார். மேலும் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், கடையின் ஊழியர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக காவல் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வருவதாகவும், நகைக்கடைகள், வங்கிகள் போன்ற முக்கியமான இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பல முறை வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் காவல் துறை கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்தார்.

வழக்கமாக இந்த சாலைகளில் காவல் துறை ரோந்து பணிகளில் ஈடுபடுவார்கள் எனவும்; காவல் துறை ரோந்து வராத நேரத்தை பார்த்து இந்த திருட்டுச் சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், இந்த நகைக் கடைக்கு கடந்த மூன்று மாதங்களாக பாதுகாவலர் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தனியார் கல் குவாரியிலிருந்து அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.