பணம் திருட்டு - மனம் திருந்தி பணத்தை திரும்ப உண்டியலில் போட்ட 'நல்ல திருடர்'

author img

By

Published : Jun 23, 2022, 3:42 PM IST

பணத்துடன் கடிதத்தை வைத்த திருடன்

கோயில் உண்டியலை உடைத்து 10ஆயிரம் ரூபாய் திருடிச்சென்றவர் மனம் திருந்தி பணத்தையும், அதனுடன் கடிதத்தையும் வைத்துச்சென்ற சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது.

ராணிப்பேட்டை: லாலாபேட்டை அருகே புகழ்பெற்ற காஞ்சனகிரிமலையில் ஈஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் கடந்த சித்திரை மாதம் சித்ராபெளர்ணமி விழா சிறப்பாக நடைபெற்றது. இக்கோயில் வளாகத்தில் 1008 சுயம்பு லிங்கங்கள் உள்ளன.

சித்ராபௌர்ணமி நடைபெற்ற சில தினங்களுக்குள், இங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடு போனது. இது குறித்து கோயில் நிர்வாகத்தினர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கோயில் நிர்வாகத்தினர் 1008 சுயம்பு லிங்கங்கள் முன்பு வைத்திருந்த உண்டியலை திறந்து அதிலிருந்த பணத்தை எடுத்தனர். அப்போது உண்டியலில் பக்தர்கள் செலுத்திய பணத்துடன், மேலும் ஒரு கடிதமும் அதனுள்ளே 500 ரூபாய் நோட்டுகள் 20ம் இருந்தன (ரூ 10,000).

அந்த சீட்டை பிரித்துப் பார்த்தபோது அதில், “என்னை மன்னித்துவிடுங்கள். சித்ராபௌர்ணமி முடிந்தபின், நான் எனக்குத் தெரிந்த கோயில் உண்டியலை உடைத்து பணத்தைத்திருடி விட்டேன். அப்போது இருந்து எனக்கு மனசு சரியில்லை. நிம்மதியில்லை. அப்புறம் வீட்டில் நிறைய பிரச்னைகள் வருகின்றன. எனவே, நான் மனம் திருந்தி எடுத்த பணமான ரூ.10 ஆயிரத்தை அதே உண்டியலில் போட்டு விடுகிறேன். எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள். கடவுளும் என்னை மன்னிப்பாரா என தெரியாது” என இருந்தது.

இதனையடுத்து ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்த கோயில் நிர்வாகத்தினர் இந்த கடிதத்தை சிப்காட் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர், மனம் திருந்தி மீண்டும் பணத்தை உண்டியலில் மன்னிப்பு கடிதத்துடன், செலுத்தியது பரபரப்பையும், இறை பக்தியின் பெருமையையும் உணரச் செய்வதாகவும் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

பணத்துடன் கடிதத்தை வைத்த திருடன்
பணத்துடன் கடிதத்தை வைத்த திருடன்

இதையும் படிங்க: 'இப்படியும் சில மனிதர்கள்' - பணப்பிரச்னையால் தங்கையை கத்தியால் குத்திய அண்ணன்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.