ராணிப்பேட்டையில் உயிரிழந்தவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூராய்வு

author img

By

Published : Jul 8, 2021, 4:34 PM IST

உடற்கூராய்வு

கணவன் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதால், புதைக்கப்பட்ட உடலை மீண்டும் தோண்டி எடுத்து, உடற்கூராய்வு செய்ய வேண்டும் என இளம்பெண் அளித்த புகாரின்பேரில், இன்று தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை அடுத்த குடிமல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா (21). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயலிங்கத்தை (26), காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு விஜயலிங்கத்தின் தாயார் சம்மதிக்கவில்லை. இதனால் அவ்வப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.

இந்நிலையில் கடந்தாண்டு தனது கணவர் விஜயலிங்கத்தின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, மல்லிகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கைகலப்பாக மாறிய வாய்த்தகராறு

இதனைத் தொடர்ந்து கடந்த மே 21ஆம் தேதி சொத்துகள் குறித்து பேசுவதற்காக விஜயலிங்கத்தின் தாயார், இருவரையும் வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது குடும்பச் சொத்துக்கும், இருவருக்கும் இனி எந்தச் சம்பந்தமும் இல்லை எனக் கையெழுத்திட விஜயலிங்கம், மல்லிகா ஆகியோர் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

ஒருகட்டத்தில் வாய்த்தகராறு, கைக்கலப்பாக மாறியுள்ளது. ஒருகட்டத்தில் சொத்துப் பிரச்சினையைச் சுமுகமாகப் பேசி முடித்து வீடு திரும்புவதாகக் கூறிய விஜயலிங்கம், மல்லிகாவை அவரது தாய் வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

உயிரிழப்பு காரணம் தெரிவிக்காமல் தாக்குதல்

பின்னர் பிரச்சினை நடைபெற்றதற்கு மறுநாளான மே 22ஆம் தேதி, காலை 6 மணி அளவில் விஜயலிங்கம் இறந்துவிட்டதாக மல்லிகாவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவரின் உயிரிழப்பு குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த மல்லிகா, விஜயலிங்கத்தின் மரணத்திற்கான காரணம் குறித்து வினவியுள்ளார். ஆனால், உயிரிழப்புக்கான காரணத்தைக் கூறாமல், விஜயலிங்கம் குடும்பத்தினர் மல்லிகாவைத் தாக்கியுள்ளனர். பின்னர் அவசரகதியில் விஜயலிங்கத்தின் உடலும் புதைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மீண்டும் உடற்கூராய்வு செய்ய உத்தரவு

இந்நிலையில் தனது கணவர் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதால், அவரது உடலை மீண்டும் தோண்டி எடுத்து உடற்கூராய்வு செய்ய வேண்டும் என கடந்த ஜூன் 3ஆம் தேதி ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளரிடம், மல்லிகா புகாரளித்தார்.

புகாரின்பேரில் சடலத்தை தோண்டியெடுத்து உடற்கூராய்வு செய்ய, காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உத்தரவிட்டார்.

அதன்படி வாலாஜா வட்டாட்சியர், மருத்துவர்கள், காவலர்கள் முன்னிலையில் விஜய லிங்கத்தின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டது. உடற்கூராய்வின் முடிவறிக்கையில் விஜயலிங்கத்தின் உயிரிழப்புக்கான காரணம் வெளிவரும் என நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: 17 வயது சிறுமி கர்ப்பம்: போக்சோவில் இளைஞர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.