ETV Bharat / state

அரசு வேலை பெற்று தருவதாக மோசடி; ராணிப்பேட்டையில் கணவன் மனைவி கைது

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2024, 8:59 AM IST

Ranipet News
ராணிப்பேட்டையில் கணவன் மனைவி கைது

Ranipet News: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி வரை பண மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பஜார் வீதியில் இ-சேவை மையம் வைத்து நடத்தி வருபவர் செந்தில்குமார்(40). இவரது மனைவி அறிவழகி(32). கணவன் மனைவியான இருவரும், காவேரிப்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து அரசு வேலைக்காக விண்ணப்பிக்க வரும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களைக் குறி வைத்து அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஒருவருக்கு ரூ.2 முதல் ரூ.5 லட்சம் வரை பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல, முதியோர் உதவித்தொகை பெற ரூ.5 ஆயிரம் வரை வசூலிப்பதோடு இதற்கு ஏஜெண்டுகளை வைத்து வசூலிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காவேரிப்பாகத்தைச் சேர்ந்த சங்கீதா என்ற பட்டதாரி பெண் அளித்த புகாரின் பேரில், அறிவழகியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கணவர் செந்தில்குமாரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு, அவர்களிடம் இருந்து ரூ.4.58 லட்சம் ரொக்கம், 5 சவரன் தங்க நகை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து இருவர் மீதும் திட்டமிட்டு ஏமாற்றுதல், பணமோசடி என 406, 417, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வாலாஜாபேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இருவரும் சேர்ந்து மொத்தமாக ரூ.1 கோடி வரை பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்டர்நெட் சென்டர் நடத்தி, பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட தம்பதி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், கரூரில் கடந்த 3 நாட்களுக்கு முன், பெண்களை மட்டும் குறி வைத்து நூதன மோசடியில் ஈடுபட்ட பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கரூர் நகர காவல்நிலையத்தை மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: 17 போலீசார் மீது துறைரீதியான நடவடிக்கை.. விளக்கம் அளித்த தமிழக அரசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.