ETV Bharat / state

மிளகாய் பொடி தூவி, கத்தி முனையில் 16 லட்சம் கொள்ளை ராணிப்பேட்டையில் பரபரப்பு

author img

By

Published : Jun 17, 2023, 6:02 PM IST

Ranipet robery
ராணிப்பேட்டை கொள்ளை

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியில் மிளகாய் பொடி தூவி கத்தி முனையில் 16 லட்சம் கொள்ளை. பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்த 4 மணி நேரத்தில் போலீசார் குற்றவாளிகளை கைது செய்ததுள்ளனர்.

ராணிப்பேட்டை: ஆற்காடு பகுதியில் APR சிட்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருபவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யார், புளிரம்பாக்கம் பகுதியை சேர்ந்த தமிழ்பிரியன் (22) மற்றும் ஊழியர் பிரபாகரன் (41). இவர்கள் இருவரும் நேற்று (ஜூன் 16) இரவு நிதி நிறுவனத்தில் வசூலிக்கப்பட்ட சுமார் 16 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை, ஆற்காட்டில் இருந்து செய்யார் பகுதியில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில், வசூலிக்கப்பட்ட பணத்தை ஒப்படைப்பதற்காகத் தனது இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது கலவை அடுத்த முள்ளுவாடி அருகே உள்ள தனியார் வேளாண் கல்லூரி பகுதியில், 4 பேர் கொண்ட மர்ம கும்பல், APR சிட்ஸ் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவி, கத்தி முனையில் அவர்களை மிரட்டி, அவர்கள் கொண்டு சென்ற 16 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை அவர்களிடமிருந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக APR நிதி நிறுவன மேலாளர் தமிழ்பிரியன் இன்று (ஜூன் 17) காலை கலவை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து DSP பிரபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, ஆய்வாளர் காண்டீப்பன் உட்பட போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டு விசாரணை செய்தனர்.

விசாரணையில், APR சிட்ஸ் தனியார் நிதி நிறுவன ஊழியர்களிடம் இருந்து கொள்ளையடித்த கும்பல் செய்யார் பகுதியில் பதுங்கி இருந்துள்ளனர். இதனை அறிந்த போலீசார் அந்த மர்ம கும்பலை கைது செய்து, கலவை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

கொள்ளை கும்பலிடம் மேற்கொண்ட விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் தாலுக்காவுக்கு உட்பட்ட புளிரம்பாக்கம் பகுதியை யுவராஜ், நெடும்பிறை, மணிகண்டன் (19) மற்றும் தூளி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (23) மற்றும் பெரியகோவில் பகுதியை சேர்ந்த கந்தன் (26) ஆகிய 5 பேரும் நண்பர்கள் எனவும், அனைவரும் தனித்தனியாக கூலி வேலை செய்வதும் தெரியவந்ததுள்ளது.

குறிப்பாக நிதி நிறுவன மேலாளர் தமிழ்பிரியன் கிராமத்தை சேர்ந்த குற்றவாளியான யுராஜ்க்கு தினந்தோறும் தமிழ்பிரியன் ஆற்காட்டில் இருந்து செய்யார் பகுதிக்கு பணம் கொண்டு வருவதை நோட்டமிட்டு, இந்த கொள்ளை நடத்தியதாக விசாரணையில் தெரிவித்துள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் புகார் அளித்த 4 மணி நேரத்தில் கொள்ளையடித்த குற்றவாளிகள் அனைவரையும் போலீசார் கைது செய்ததோடு, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆருத்ரா மோசடி: நெமிலியில் ஊழியரை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல்.. வீடு சூறையாடல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.