ETV Bharat / state

நீச்சல் பயணமாக 10 மணி நேரத்தில் இலங்கை டூ இந்தியா: அமெரிக்க பெண் சாதனை

author img

By

Published : Feb 27, 2020, 5:26 PM IST

swimming
swimming

அமெரிக்காவைச் சேர்ந்த எடி ஹு என்ற பெண் இலங்கையிலுள்ள தலைமன்னார் முதல் தமிழ்நாட்டிலுள்ள தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10 மணி நேரத்தில் கடந்து சாதனைப் படைத்துள்ளார்.

பாக் ஜலசந்தி கடற்பகுதி என்பது தமிழ்நாட்டையும் இலங்கையையும் பிரிக்கும் இடமாகும். ராமேஸ்வரத் தீவும், அதைத் தொடர்ந்துள்ள மணல் திட்டுகளான ஆதாம் பாலமும் பாக் ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவிலிருந்து பிரிக்கிறது. இந்தியாவிலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் பாறைகளும், ஆபத்தான ஜெல்லி மீன்களும் நிறைந்த கடற்பகுதியாக இது கருதப்படுகிறது.

இந்நிலையில், சர்வதேச அளவில் பல்வேறு நீச்சல் போட்டிகளில் சாதனைப் படைத்த அமெரிக்காவைச் சார்ந்த பெண்மணி எடி ஹு (45), இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான சுமார் 30 கி.மீ. தொலைவுள்ள பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்திக் கடப்பதற்காகக் கடந்த மாதம் டெல்லியில் உள்ள வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை அமைச்சகங்கள், இலங்கைத் தூதரகத்துக்கு அனுமதி கோரி கடிதம் அனுப்பியிருந்தார்.

கடலில் செல்ஃபி
கடலில் செல்ஃபி

இதையடுத்து, இந்தியா - இலங்கை ஆகிய இரு நாடுகளின் அனுமதியும் கிடைத்த நிலையில், இலங்கையிலுள்ள தலைமன்னாரிலிருந்து நேற்று அதிகாலை சரியாக ஐந்து மணிக்கு இங்கிலாந்தைச் சார்ந்த ஆடம் மோஸ் என்பவருடன் சேர்ந்து எடி ஹு நீந்தத் தொடங்கினார்.

12.05 மணியளவில் இலங்கை - இந்தியா சர்வதேச எல்லைக்கு வந்தடைந்த இவர்கள், பிற்பகல் 3.15 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை அருகே உள்ள முதலாம் தீடை அருகே, 10.15 மணி நேரத்தில் வந்தடைந்தனர்.

இருவரும் நீந்திவரும் காட்சி

இவர்களுக்கு உதவியாக இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு சர்வதேச எல்லை வரையிலும், இந்திய கடற்பகுதியில் நாட்டின் கடலோரக் காவல் படையினரும் பாதுகாப்பு வழங்கினர். எடி ஹு தனது குழுவினருடன் தனுஷ்கோடி முதலாம் தீடையிலிருந்து படகு மூலம் மாலை 4.15 மணியளவில் தலைமன்னாருக்குப் புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து அவருக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: 'மினி சாதனையாளன் டெனி' - அடுத்த இலக்கு கின்னஸ்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.