ETV Bharat / state

கடனுக்காக மகனை அடமானம் வைத்த தந்தை!

author img

By

Published : Jul 20, 2021, 2:17 PM IST

or-loan-father-mortgage-son-in-paramakudi
கடனுக்காக மகனை அடமானம் வைத்த தந்தை!

கடனுக்காக குழந்தைகளை நாள்தோறும் அடமானம் வைக்கும் தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பரமக்குடியில் பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

ராமநாதபுரம்: பரமக்குடி நகைக்கடை பஜாரை சேர்ந்த ரமேஷுக்கும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த சரண்யாவுக்கும் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ரூபேஷ்(13) என்ற மகனும், ஹர்சிதா(11) என்ற மகளும் உள்ளனர்.

ரமேஷ் பரமக்குடி நகைக்கடை பஜாரில் நகைக்கடை நடத்திவருகிறார். தொழிலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நஷ்டம் ஏற்பட்டதையடுத்து சரண்யாவின் நகைகளை விற்று தொழில் நடத்திவந்துள்ளார்.

மேலும், நலிவுற்ற நிலையில் கடன் வாங்கி ரமேஷ் தொழில் நடத்திவந்துள்ளார். இந்நிலையில் கடனை அடைக்க முடியாததால் கடன் கொடுத்தவர்கள் ரமேஷை தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளனர். இதனால், சரண்யாவுக்கும், ரமேஷுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தினசரி சண்டை நடந்துவந்துள்ளது.

நாள்தோறும் மகனை அடமானம் வைக்கும் தந்தை

கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்ததால் மகன் ரூபேஷை கடன் பெற்றவர்களிடம் காலை ஒப்படைத்துவிட்டு பணம் செலுத்திய பின்பு மீண்டும் இரவு வீட்டிற்கு அழைத்து வருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக இது நடந்துவர இதுதொடர்பாக சரண்யா பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இருப்பினும், காவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், ரமேஷ் சரண்யாவை வீட்டிலிருந்து வெளியே விரட்டி விட்டுள்ளார்.

இதனால், பாதிக்கப்பட்ட சரண்யா தனது மகனுடன் பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா செய்தார். சரண்யாவிடம் காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும், எவ்வித சமரசமும் ஏற்படவில்லை.

தர்ணா போராட்டத்தில் தாய்

இதுகுறித்து சரண்யா பேசுகையில், எனது கணவருக்கு தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக எனக்கு வரதட்சணையாக அளிக்கப்பட்ட அனைத்து நகைகளையும் விற்றுவிட்டார். கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்வதால் எனது மகனை தினசரி அடமானம் வைக்கிறார் கணவர்.

என் மகனுக்கு காலை முதல் மாலை வரை உணவு கூட அளிக்காமல் கடன் கொடுத்தவர்கள் சித்ரவதை செய்கின்றனர். எனது கணவரும் மாமனாரும் என்னையும்,குழந்தைகளையும் அசிங்கமாக பேசி தொந்தரவு செய்து இன்று வீட்டை விட்டு வெளியே விரட்டி விட்டனர்.

கடனுக்காக எனது மகனை அடமானம் வைக்கும் கணவர் ரமேஷ் மீது மற்றும் கடன் கொடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

கடனுக்காக பெற்ற மகனை தந்தையே தினசரி அடமானம் வைத்த சம்பவம் பரமக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நகைக்கடை உரிமையாளரிடமிருந்து 176 பவுன் தங்க நகை பறிமுதல் - பறக்கும் படை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.