ETV Bharat / state

எங்க ஊருக்கு கழிவறை வசதியை ஏற்படுத்தித் தர முடியுமா?: மாணவியின் கோரிக்கைக்கு செவிமடுத்த தொண்டு நிறுவனம்!

author img

By

Published : Oct 21, 2020, 8:01 PM IST

Updated : Oct 29, 2020, 5:07 PM IST

என்னதான் டிஜிட்டல் இந்தியாவாக அழைக்கப்பட்டாலும் இன்னும் பல ஊர்களில், கிராமங்களில் கழிப்பறை வசதி கூட இல்லாமல் திறந்த வெளியில் தான் மக்கள் மலம் கழிக்கச் செல்கின்றனர். கழிப்பறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கூட இந்த நிலை மாறிய பாடு இல்லை. புதுக்கோட்டை மாவட்டத்திலும் இந்த கழிப்பறை பிரச்னையானது பரவலாக காணப்படுகிறது. இது பற்றிய ஒரு சிறிய தொகுப்பு...!

மாணவியின் கோரிக்கைக்கு செவிமடுத்த தொண்டு நிறுவனம்
மாணவியின் கோரிக்கைக்கு செவிமடுத்த தொண்டு நிறுவனம்

ஒரு கிராமத்தில் மாணவி ஒருவரின் வேண்டுகோளை ஏற்று 120 கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா. ஆனால் அது உண்மை. ஆம், புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை என்றாலே முதலில் நமது நினைவுக்கு வருவது முந்திரிப்பருப்பு தான். இந்த கிராமம் வழியே செல்பவர்கள் ஆதனக்கோட்டை முந்திரிப்பருப்பை சுவைக்காமல் செல்வதே கிடையாது. அந்த அளவிற்கு மிகவும் பிரபலம். ஆனால் தற்போது இந்த ஊரின் பெயரை சொல்லும் போதே முந்திரிப்பருப்பை காட்டிலும் முதலில் நினைவுக்கு வருவது புதுக்கோட்டைக்கு பெருமை சேர்த்த நாசா பெண் என்று அழைக்கக்கூடிய ஜெயலட்சுமி என்ற பள்ளி மாணவி.

இவர் நாசா செல்வதற்காக தேர்வு எழுதி, அதில் வெற்றி பெற்று குடும்ப வறுமை காரணமாக அங்கு செல்ல முடியாமல் தவித்து வந்த நிலையில், பல்வேறு அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவி மூலம் நாசா செல்வதற்கான வாய்ப்பை இவர் பெற்றார். அதிலும் இவர் நமது ஈடிவிக்கு மிகவும் பரிச்சயமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமதினருடன் கிராமாலயா நிறுவனத்தினர்
கிராமதினருடன் கிராமாலயா நிறுவனத்தினர்

இவருக்கு நாசா செல்வதற்கான பண உதவிகளை பல்வேறு அமைப்பினரும் செய்துகொண்டிருக்கும் வேளையில், கிராமாலயா என்ற தொண்டு நிறுவனம் ஒன்று ஜெயலட்சுமியை அவரது வீட்டில் சந்தித்தனர். அப்போது அவர்கள், இதுதான் உங்களது வீடா? ஒரு கழிவறை வசதி கூட கிடையாதா? எனக் கேட்டனர். அதற்கு ஜெயலட்சுமி, எனது வீட்டில் மட்டுமல்ல என் ஊரில் உள்ள அனைவரது வீட்டிலுமே கழிவறை வசதி கிடையாது. உங்களால் எனது ஊருக்கு கழிவறை வசதியை ஏற்படுத்தி தர முடியுமா? என்று கோரிக்கை வைத்தார்.

அதற்கு அவர்கள் நிச்சயமாக செய்கிறோம் என்று உறுதி அளித்ததோடு, அவ்வூர் மக்களை திரட்டி கழிவறையின் முக்கியத்துவத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியதோடு, ரூபாய் 3 ஆயிரம் மட்டும் செலவு செய்து ஒரு அடிதளம் மட்டத்தை மட்டும் போடுங்கள், குளியலறை உடன் கூடிய கழிவறையை கட்டி தருகிறோம் என்று உறுதியளித்தனர். அதன்படி அப்பகுதி மக்கள், இது ஒரு நல்ல வாய்ப்பு என கருதி, அடிதளத்தை மட்டும் போட்டனர். அதனைதொடர்ந்து, கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் சிஇஓ தாமோதரன் என்பவரின் திட்டப்படி அந்த ஊரில் உள்ள 120 குடும்பங்களுக்கும் குளியலறையுடன் கூடிய கழிவறை வசதியை கட்டிக் கொடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்நிறுவனத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இது குறித்து மாணவி ஜெயலட்சுமியினிடம் கேட்டபோது, “அனைத்து நல்ல உள்ளங்களின் உதவியோடு, நான் நாசா செல்ல தயாராகி விட்டேன். எனவே இதற்கு காரணமான ஈடிவி மற்றும் எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை எனது வீட்டில் சந்தித்த கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் சிஇஓ தாமோதரன், உனது வீட்டில் கழிவறை கூட கிடையாதா என்று கேட்டார். எங்களது வீட்டில் மட்டுமல்ல எங்கள் ஊரில் யார் வீட்டிலும் கிடையாது. எனக்கு நாசா செல்வதற்கு தேவையான அளவு பணம் கிடைத்து விட்டது. அதனால் எனக்கு நீங்கள் செய்ய வேண்டிய உதவியை எனது ஊர் மக்களுக்கு கழிவறை கட்டிக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினேன். முதலில் செய்வார்களா மாட்டார்களா என நினைத்தேன். ஆனால் உடனடியாக மக்களை அழைத்து பேசி அதற்கான பணிகளைத் தொடங்கினார்கள். நாங்கள் அனைவருமே காட்டுப்பகுதிக்கு தான் பகல் நேரமாக இருந்தாலும், இரவு நேரமாக இருந்தாலும் மலம் கழிக்க செல்வோம். ஆனால் தற்போது கிராமாலயா தொண்டு நிறுவனத்தினர் எங்களுக்கு கழிவறையை கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என தெரிவித்தார்.

மாணவியின் கோரிக்கையை ஏற்று கட்டி கொடுக்கப்பட்ட கழிப்பறை

“முதலில் ஜெயலட்சுமி நாசா செல்வதற்கு உதவ வேண்டுமென தான் இங்கு வந்தோம். ஆனால் இங்கு வந்த பிறகு தான் தெரிந்தது, இந்த ஊரில் கழிவறை வசதி கிடையாது என்று. அதன் பின் ஜெயலட்சுமி கழிவறையை கட்டிக் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று பணிகளைத் தொடங்கினோம். சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் இக்கிராமமக்களுக்கு கழிவறையை கட்டிக் கொடுத்திருக்கிறோம். இதற்கு பேங்க் ஆப் அமெரிக்கா மற்றும் கிராமாலயாவின் அனைத்து உறுப்பினர்களும் உதவியுள்ளனர். மேலும் கழிவறையின் முக்கியத்துவம் மாதவிடாய் காலங்களில் எப்படி தூய்மையாக இருக்க வேண்டும், என்ற சுகாதார கல்வியையும் இப்பகுதி மக்களுக்கு வழங்கி இருக்கிறோம். இதனால் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இதுபோல ஏற்கனவே குன்றாண்டார் கோவில் பகுதியில் இதுபோல் 750 குடும்பங்களுக்கு கழிவுகளை கட்டிக் கொடுத்தோம். எங்களது கிராமாலயா அமைப்பு தமிழ்நாடு மட்டுமில்லாமல் புதுச்சேரி, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களும் இயங்குகிறது. புதுக்கோட்டையில் இன்னும் நிறைய ஊர்களில் கழிவறை வசதி இல்லாமல் தான் இருக்கிறது. அது மிகுந்த வேதனை அளிக்கிறது” என்று கூறினார் கிராமாலயா நிறுவனத்தின் சிஇஓ தாமோதரன்.

இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், “இப்பகுதியில் வசிக்கும் அனைத்து பெண்களும் சரி, ஆண்களும் சரி, குழந்தைகளும் சரி கழிவறையை பார்த்ததுகூட கிடையாது. அப்படி என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தோம். ஆனால் கடவுள் போல ஜெயலட்சுமி எங்களுக்காக தாமோதரன் சாரிடம் பேசி இந்த ஏற்பாட்டினை செய்துள்ளார். தற்போது அவர்கள் கழிவறையை கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் கடமைக்கு என இல்லாமல் குளியலறை, டைல்ஸ், பெயிண்ட் போன்றவற்றை எல்லாம் பயன்படுத்தி நல்ல முறையில் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களுக்கு நாங்கள் மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று நெகிழ்ச்சியுடன்” தெரிவித்தனர்.


இதையும் படிங்க: கின்னஸ் சாதனைக்காக காத்திருக்கிறேன் - சிறுமியின் தளராத நம்பிக்கை

Last Updated : Oct 29, 2020, 5:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.