ETV Bharat / state

தமிழக கிரிக்கெட் சங்க நிர்வாகியிடம் வாக்குவாதம்! புதுக்கோட்டை கிரிக்கெட் சங்கத்தினர் திடீர் முற்றுகை! என்ன காரணம்?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2023, 8:56 AM IST

TNCA Assistant Secretary RN Baba
தமிழக கிரிக்கெட் சங்க நிர்வாகியிடம் வாக்குவாதம் செய்த புதுக்கோட்டை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினர்

TNCA Assistant Secretary RN Baba: புதுக்கோட்டை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் ஆண்டு விழாவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க உதவிச் செயலாளர் ஆர்.என்.பாபா கலந்து கொண்ட போது அந்த சங்கத்தில் முறைகேடுகள் நடப்பதாக கூறி சங்க உறுப்பினர்கள் குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தமிழக கிரிக்கெட் சங்க நிர்வாகியிடம் வாக்குவாதம் செய்த புதுக்கோட்டை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா, நேற்று (செப் 23) தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவிச் செயலாளர் ஆர்.என்.பாபா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலில் புதுக்கோட்டை மாவட்ட கிரிக்கெட் சங்கம் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், திறமையான கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் ஏமாற்றி வருவதாகவும் குற்றம் சாட்டி புதுக்கோட்டை கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் தமிழக கிரிக்கெட் சங்கத்தின் உதவிச் செயலாளர் ஆர்.என்.பாபாவோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து தான் வேறொரு நிகழ்வில் பங்கேற்க இருப்பதால் பரிசளிப்பு நிகழ்வில் பங்கேற்காமல் புறப்படுவதாகவும், வீரர்கள் யாரும் ஏமாற்றம் அடைய வேண்டாம் என்றும் மற்றொரு நாளில் வந்து தான் பரிசளிப்பதாகவும் தெரிவித்து விட்டுப் புறப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அவரை சமாதானம் செய்த சங்க நிர்வாகிகள் சாதனை படைத்த வீரர்களுக்குப் பரிசளிக்குமாறு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மாவட்ட அளவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு பரிசளித்தார்.

அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், "வேகப்பந்து வீச்சாளர் நடராஜ் சேலம் மாவட்டத்தின் குக்கிராமத்தில் இருந்து பிறந்து வந்து இன்று பெரிய அளவிலான சாதனைகளைப் படைத்து வருகிறார், தற்போது அவர் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். அவருக்கான எதிர்காலம் பிரகாசமாக உள்ளது.

உலகக் கோப்பைக்காண இந்திய அணியில் அஸ்வின் இடம் பெறாததால் பெரிய பாதிப்பு வந்துவிடாது. தேர்வுக் குழு வீரர்கள் முடிவில் நாம் ஏதும் கருத்துச் சொல்ல முடியாது. சாய் சுதர்சன், சாய் கிஷோர் பிசிசிஐ அனுமதி பெற்று இங்கிலாந்தில் நடைபெறக் கூடிய கவுண்டி போட்டிக்குச் சென்றுள்ளனர். இங்கிலாந்தில் உள்ள கால நிலைக்குத் தகுந்தாற் போல் அவர்கள் விளையாட ஒரு பயிற்சியாக கவுண்டி கிரிக்கெட் போட்டி அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்தியா அணியில் உள்ள ஒருவர் விலகி உள்ளதால் அவருக்குப் பதில் சாய் கிஷோர் இடம் பிடித்துள்ளார். மற்றொருவரும் விலக நேரிட்டால் சாய் சுதர்சனுக்கும் வாய்ப்பு கிடைக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆசிய விளையாட்டு போட்டி: நேபாளத்தை வீழ்த்திய இந்திய மகளிர் டேபிள் டென்னிஸ் அணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.