புதுக்கோட்டை: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் (50) கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி இரவு பூலாங்குடி காலனி என்ற இடத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் ஆடுகளை திருடி இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு வந்தனர்.
சந்தேகத்தின் பேரில் போலீசார் அந்த வாகனத்தை நிறுத்த முயன்றார். ஆனால், மூன்று நபர்களும் நிற்காமல் சென்றதால் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் உள்ளிட்ட போலீசார் இருசக்கர வாகனத்தில் சென்ற மூவரைப் பின்தொடர்ந்து சென்றார். அப்போது மணிவிஜய் நகர் ரயில்வே பாலம் அருகே மூவரும் இருந்த வாகனத்தை இடைமறித்து விசாரித்துள்ளார்.
அப்போது மணிகண்டன் (வயது 19) தன்னுடன் இருந்த இரு சிறார்களுடன் சேர்ந்து இரு சக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த பூமிநாதன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர், பூமிநாதன் அரிவாளால் வெட்டப்பட்டு கொல்லப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், சேகர் அளித்த புகாரின் பேரில் கீரனூர் காவல்நிலையத்தில் பூமிநாதன் கொலை தொடர்பான வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலை செய்த நபர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
போலீசாரின் தேடுதல் வேட்டையில், மணிகண்டன் மற்றும் இரண்டு சிறார்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர், மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மணிகண்டன் சிறையிலும், இரு சிறார்களும் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட மணிகண்டன் மீது ஏற்கனவே வழக்கு இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கின் விசாரணை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று(செப்.27) தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில், வரும் வெள்ளிக்கிழமை(செப்.29) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:நந்தி வாயிலிருந்து கொட்டும் நீர்! குவியும் மக்கள்! எங்க தெரியுமா?