ETV Bharat / state

மாணவிகளோடு தரையில் அமர்ந்து புத்தகம் வாசித்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!

author img

By

Published : Jul 7, 2023, 11:58 AM IST

Etv Bharat
Etv Bharat

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழாவை நடத்த உள்ளது. புத்தகத் திருவிழா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக "புதுக்கோட்டை வாசிக்கிறது" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா மாணவிகளோடு தரையில் அமர்ந்து புத்தகம் வாசித்தார்.

மாணவிகளோடு தரையில் அமர்ந்து புத்தகம் வாசித்த மாவட்ட ஆட்சியர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து புதுக்கோட்டையில் வரும் 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை புத்தகத் திருவிழாவை நடத்த உள்ளது. இந்த புத்தகத் திருவிழாவில் ஏராளமான அரங்குகள் அமைக்கப்பட்டு, பல்வேறு பதிப்பகங்கள் மற்றும் எழுத்தாளர்களின் புத்தகங்களை காட்சிப்படுத்தி விற்பனைக்கு வைக்க உள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, புத்தகத் திருவிழா பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து நேற்று (ஜூலை 06) "புதுக்கோட்டை வாசிக்கிறது" என்ற தலைப்பில் நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் 2,000-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், நூலகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலர்கள் ஆகியோர் இணைந்து ஒரு மணி நேரம் அவர்கள் இருக்கும் இடத்திலேயே புத்தகங்களை வாசித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

புதுக்கோட்டை அரசு ராணியார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, "புத்தகங்கள் வாசிப்பதால் நமது அறிவு வலுப்பெறும். தினமும் ஒரு மணி நேரமாவது புத்தகங்களை வாசிக்க மாணவ மாணவிகள் பழகிக் கொள்ள வேண்டும்" என்றும் கூறினார்.

மேலும் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், மாணவிகளோடு மாணவியாக தரையில் அமர்ந்து மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தான் எடுத்து வந்திருந்த புத்தகத்தை வாசித்து மாணவர் மாணவிகளுக்கு முன்னுதாரணமாக இருந்தார். மாவட்ட ஆட்சியரின் இந்தச் செயல் மாணவ, மாணவிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) தமிழ்செல்வி, மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார், புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ், பள்ளித் துணை ஆய்வாளர் குருமாரிமுத்து, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், வட்டாட்சியர் விஜயலெட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, "ஒவ்வொரு ஆண்டும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறது. அதன்படி, நடப்பாண்டில் 6ஆவது புத்தகத் திருவிழா புதுக்கோட்டை நகர்மன்றத்தில் வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுமார் 3 லட்சம் பள்ளி, கல்லூரி, மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் பொது இடங்களில் 'புதுக்கோட்டை வாசிக்கிறது' என்ற மாபெரும் நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் துவக்கி வைக்கப்பட்டது.

மேலும் இந்த புத்தகத் திருவிழாவில், பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் மக்களின் பார்வைக்காக நூற்றுக்கும் மேற்பட்ட அரங்கங்களில் விற்பனைக்காக வைக்கப்பட உள்ளது. அதுமட்டும் இன்றி அறிஞர்கள், சொற்பொழிவாளர்கள் உள்ளிட்டப் பல்வேறு தலைப்புகளின் கீழ் சொற்பொழிவாற்றவும் உள்ளனர்.

தினந்தோறும் ஒரு மணிநேரம் படிப்பிற்காக செலவிடும் பொழுது நமது எண்ணம் மேம்படும். மேலும், நம்முடைய தன்னம்பிக்கை வலுப்பெறும் மற்றும் உலகத்தைப்பற்றி தெரிந்துகொள்ளலாம். கிராமப்புறங்களில் பொதுமக்களிடையே நூலகப் பயன்பாட்டை உறுதி செய்யும் வகையில் அனைத்து நூலகங்களும் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களால் நிர்வகிக்கப்பட்டு, மக்களுக்குத் தேவையான புத்தகங்கள் நூலகங்களில் வைக்கப்பட உள்ளது.

புத்தக வாசிப்பு என்பது கற்பனை உலகத்தை நிஜமாக்கும், நம்மிடையே வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும். எனவே, மாணவர்கள் அனைவரும் படிக்கும் பழக்கத்தை சிறு வயது முதலே பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். இதன்மூலம் எதிர்காலத்தில் நாம் என்னவாகப் போகிறோம் என்பதற்கான வழிவகையினை ஏற்படுத்தும். புத்தகம் வாசிப்பின் மூலம் நம்மிடையே வளரும் அறிவு செல்வத்தை வைத்து இச்சமுதாயத்திற்கு பயன்தரக்கூடிய மக்களாக வளர வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்கும் மாணவர்களுக்கு 'நெக்ஸ்ட்' தேர்வு கட்டாயம்.. அமலுக்கு மத்திய அரசின் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.