ETV Bharat / state

Pudukottai:எங்கள் அமைச்சரை பதவி நீக்கம் செய்ய நீ யார்? ஆளுநருக்கு எதிராக திமுக ஒட்டிய சுவரொட்டிகள்

author img

By

Published : Jul 4, 2023, 10:20 PM IST

ஆளுநர் ரவி
திமுக ஒட்டிய சுவரொட்டிகள்

எங்கள் அமைச்சரை பதவி நீக்கம் செய்ய நீ யார்? என்றும் மத்திய அரசில் குற்ற பின்னணி உள்ள அமைச்சர்கள் புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதோடு, முதலில் மத்திய அமைச்சர்களை டெல்லிக்கு சென்று டிஸ்மிஸ் செய்ய கூறிவிட்டு பின்பு எங்கள் அமைச்சர் மீது நடவடிக்கை எடு என்ற வாசகங்களோடு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதால் புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆளுநருக்கு எதிராக புதுக்கோட்டையில் திமுக ஒட்டிய சுவரொட்டிகள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் வரும் 14ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை '48வது கம்பன் விழா' நடைபெற உள்ளது. இதன் நிறைவு நாளான வரும் ஜூலை 24ஆம் தேதி இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்வதாக இருந்தது. இந்தநிலையில், பல தரப்பிலிருந்தும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அவரது வருகை ரத்தானதாக இன்று (ஜூலை 4) தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத்தொடர்ந்து, இவ்விழாவிற்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழும் மாற்றி அச்சிடப்பட்டன.

கம்பன் கழக பெருவிழா: புதுக்கோட்டைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியின் வருகை தர இருந்த நிலையில், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டிய நிலையில், அவர் வருகை திடீரென ரத்தானது. தமிழ்நாட்டில் ஆளுநருக்கும், தமிழ்நாடு அரசு உட்பட திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளுக்கும் இடையே மோதல் போக்கு உச்சத்தில் இருந்து வருகிறது. மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்துவிட்டு, அதை நிறுத்தி வைத்ததாக பின்னர் அறிவித்த ஆளுநரின் நடவடிக்கைக்கு பிறகு இந்த மோதல் போக்கு கடுமையான உச்சத்தை எட்டியுள்ளது எனலாம்.

திமுக ஆளுநருக்கு எதிராக ஒட்டிய சுவரொட்டிகள்: இந்த நிலையில், புதுக்கோட்டை நகர் முழுவதும் திமுக சார்பில் ஆளுநரை கண்டித்து இன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், 'எங்கள் அமைச்சரை பதவி நீக்கம் செய்ய நீ யார்?' என்று ஆளுநர் புகைப்படத்தை போட்டு கேள்வி எழுப்பியுள்ளனர். அத்தோடு மத்திய அரசில் குற்ற பின்னணி உள்ள அமைச்சர்களின் புகைப்படங்கள் பெயர்கள் மற்றும் அவர்களின் குற்றப் பின்னணி குறித்த விவரங்களும் அந்த சுவரொட்டியில் இடம் பெற்றுள்ளன. இதனை சுட்டிக்காட்டி, முதலில் டெல்லி சென்று இந்த அமைச்சர்களை நீக்க நடவடிக்கை எடுக்கக் கூறு என்று ஆளுநரை ஒருமையில் பேசும்வகையில் வாசகங்கள் அடித்து ஒட்டப்பட்டுள்ளன.

ஆளுநரின் வருகைக்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழில் மாற்றம்
ஆளுநரின் வருகைக்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழில் மாற்றம்

ஆளுநரின் வருகை ரத்து: இந்த சுவரொட்டியால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டையில் நடக்க இருக்கிற கம்பன் கழக விழாவில் மாநில அமைச்சர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திருச்சி சிவா எம்பி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தினந்தோறும் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில், நிறைவு நாளான 23ஆம் தேதி ஆளுநர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார் என்று ஆளுநர் தேதி வாங்கி விழா குழு சார்பில் அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு இருந்தது. இதனிடையே, தற்போது தமிழ்நாட்டில் ஆளுநருக்கு எதிரான போக்கு உச்சத்தில் இருப்பதால், ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்மாவட்டத்தில் உள்ள திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் விழா குழுவிற்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

மாற்றி அச்சிடப்பட்ட அழைப்பிதழ்கள்: மேலும், ஆளுநர் வந்தால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர்கள் சமூக வலைதளங்களில் எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில், திடீரென மற்றொரு புதிய அழைப்புகள் விழா குழு சார்பில் அச்சடிக்கப்பட்டுள்ளது. அதில், 23ஆம் தேதி விழா நிறைவுறையில் ஆளுநர் பெயர் இல்லை. பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் விழா குழுவினர் ஆளுநர் பெயர் இல்லாமல் புதிய அழைப்புகள் அச்சடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மரியாதை குறைவு ஏற்பட்டுவிடுமோ? என முடிவில் மாற்றம்: இந்நிலையில் நமது ஈடிவி பாரத் கம்பன் கழக முக்கிய நிர்வாகியிடம் இது தொடர்பாக கேட்டதில், 'ஆளுநர் புதுக்கோட்டைக்கு வருகை தரும்போது, கருப்புக் கொடி காட்டுவது, கருப்பு சட்டை அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவிப்பது கூட பரவாயில்லை. அதை காவல்துறை சந்தித்துக் கொள்ளும்.

ஆனால், விழா நடைபெறும் போது ஆளுநருக்கு ஏதாவது மரியாதை குறைவு ஏற்பட்டுவிட்டால், அது புதுக்கோட்டை மாவட்டத்திற்கும், குறிப்பாக கம்பன் கழகத்திற்கும் மிகுந்த ஒரு தர்ம சங்கடமாக அமையும் எனக் கருதப்பட்டது. எனவே, தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் ஆளுநர் புதுக்கோட்டைக்கு வருகை தருவது ஒரு நல்ல நிகழ்வாக இருக்காது என்று கருதியதோடு, நிறைவு நாள் நிகழ்ச்சியில் ஆளுநர் வருகையை ரத்து செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Melpathi Draupadi Amman Temple Issue: மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம் - ஜூன் 7ல் இரண்டாம் கட்ட விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.