ETV Bharat / state

"வாங்க மதுரைக்கு உல்லாச பயணம் போகலாம்.. மாநாட்டிற்கு ஆட்கள் திரட்டும் அதிமுக" - அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

author img

By

Published : Aug 17, 2023, 1:48 PM IST

Minister Regupathy
அமைச்சர் ரகுபதி

மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம், மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உல்லாச பயணம் போகலாம் வாங்க என்று கூறி மதுரை மாநாட்டிற்கு அதிமுகவினர் ஆட்களை திரட்டி வருவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்து உள்ளார்.

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை: திமுக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முரசொலி மாறன் பிறந்தநாள் விழா இன்று (ஆகஸ்ட். 17) கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து வரும் 20 ஆம் தேதி திமுக சார்பில் நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ரகுபதி, கட்சித் தொண்டர்களிடையே உரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியது, "வரும் 20ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டை சீர்குலைக்கத்தான், அதே நாளில் திமுக உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். சீப்பை ஒளித்து வைத்துவிட்டு கல்யாணத்தை நிறுத்திய கதையாக எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.

சீப்பு அவர்களது கல்யாணம் எங்களது. அதிமுக மாநாட்டை திமுக தடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதிமுக மாநாட்டிற்கு மக்களே செல்லவில்லை என்றால், அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது. முகூர்த்த நாள் பார்த்து மாநாட்டை வைத்துள்ளனர். அதனால் அங்கு மக்கள் செல்ல மாட்டார்கள். இதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஆனால் எங்களுடைய உண்ணாவிரத போராட்டம் மாபெரும் வெற்றி அடையும். அதிமுக மாநாட்டை தோல்வி பெறச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. எங்களது போராட்டம் மாபெரும் வெற்றி பெறும் அதுவே எங்கள் நோக்கம். தமிழக மக்களின் உணர்வை, மத்திய அரசிற்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளோம்.

அதிமுக மாநாட்டிற்கு போட்டியான போராட்டம் இது அல்ல. எந்த கூட்டத்தைப் பார்த்தும் நாங்கள் அச்சப்பட தேவையில்லை. பாக முகவர்கள் கூட்டத்தையே ஒரு மாநாடாக நாங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம். எங்களது பாக முகவர்கள் கூட்டத்திற்கு ஈடாக அதிமுக எந்த ஒரு கூட்டத்தையும் நடத்த முடியாது. பாக முகவர்கள் கூட்டத்தையே ஒரு மாநாடாக நடத்தக்கூடிய கட்சி தான் திமுக. அதனால் நாங்கள் அச்சப்படவோ, பயப்படவோ தேவையில்லை.

மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வாங்க, உல்லாச பயணம் போகலாம் என்று கூறியே மதுரை மாநாட்டிற்கு அதிமுகவினர் ஆட்களை திரட்டி வருகின்றனர் என்றார். மேலும் ஜெயிலர் படத்திற்கு இலவசமாக டிக்கெட் வழங்கி மதுரை அதிமுக மாநாட்டிற்கு அழைத்து செல்வதாக வந்த தகவலுக்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, இலவச டிக்கெட் வாங்கினால் அவர்கள் படத்திற்கு தான் செல்வார்கள். ஆனால் மாநாட்டிற்கு செல்ல மாட்டார்கள்.

நீட் தேர்வு குறித்த பதில் அளித்த அமைச்சர், தமிழக ஆளுநர் தனக்கு எந்த அளவிற்கு உரிமை இருக்கிறது, உரிமை இல்லை என்பதே அவருக்கு தெரியாது. இதற்கு கையெழுத்து போட வேண்டியவர் குடியரசுத் தலைவர். அவர்தான் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இதில் பார்வேர்ட் ஏஜென்சி வேலை மட்டுமே தமிழக ஆளுநருக்கு உள்ளது. நாங்கள் அனுப்பிய மசோதாவிற்கு முடிவு சொல்ல வேண்டியது மத்திய அரசுதான், ஆளுநர் அல்ல. அதைக் கூட அவர் அறிந்து கொள்ளவில்லை என்றால் அவருடைய அறியாமையை நாங்கள் குறை சொல்ல முடியாது.

நீட் தேர்வை பொறுத்தவரை நாங்கள் தமிழக மக்களை ஏமாற்றவில்லை. அப்படி ஏமாற்றும் எண்ணம் இருந்தால் நாங்கள் ஏன் போராட்டம் நடத்த போகிறோம். வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மத்திய அரசின் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வந்து, விதிவிலக்கை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்று தருவார் என்பது உறுதி.

புதுக்கோட்டை மணிமண்டபம் கட்டுவதற்கான இட ஒதுக்கீடு என்பது பல துறை சம்பந்தப்பட்ட விவகாரம். ஏற்கனவே அங்கே ஒரு கட்டடம் இருந்தது. எனவே அந்த இடத்தைதான் தேர்வு செய்ய முடியும். இல்லையென்றால் அது காலதாமதம் ஆகும். மிகச் சிறப்பான முறையில், அனைத்து தரப்பு மக்களும் சென்று பார்க்க கூடிய வகையில், ஒரு அருங்காட்சியமாக உருவாக்கி தர வேண்டும் என்பதை எங்களது நோக்கம்.

மாமன்னர் நூற்றாண்டு விழா குழு சார்பில் மன்னர் மணிமண்டபத்திற்கு ஒதுக்கப்பட்ட இடம் வாஸ்து சரி இல்லை என கூறி வருவதாக எழுந்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், திராவிட இயக்கம் வாஸ்து எல்லாம் பார்ப்பது கிடையாது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்கக்கோரி மனுத் தாக்கல் - காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.