ETV Bharat / state

"தீபாவளிக்கு எவ்வளவு நேரம் பட்டாசு வெடிக்கலாம்" - அமைச்சர் கொடுத்த அப்டேட்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2023, 11:15 AM IST

Minister meyyanathan speech
தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு

Minister meyyanathan speech : தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி விரைவில் மாசு கட்டுப்பாட்டு துறை சார்பில் கட்டுப்பாடு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

புதுக்கோட்டை: அரசு கலைஞர் கருணாநிதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பேரவை தொடக்க விழா நடைபெற்றது. இதில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பேரவை தலைவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பதினாறு வகையான பிளாஸ்டிக் பொருளை 2019 ஆம் ஆண்டு முதல் தடை செய்துள்ளார். தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்காக 'மீண்டும் மஞ்சள் பை' திட்டத்தை முதலமைச்சர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

தற்போது தமிழ்நாட்டில் மஞ்சள் பை திட்டம் மிகச் சிறந்த வெற்றி பெற்றுள்ளது. இன்றைக்கு 25 சதவீத மக்கள் மஞ்சள் பை திட்டத்திற்கு மாறிவிட்டனர். பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணை மலடாக்குகிறது, நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது, இயற்கைக்கு எதிரானது. இதே நிலை தொடர்ந்தால் நமது தலைமுறையை மட்டுமல்ல, அடுத்த தலைமுறையையும் இது பாதிக்கும்.

அடுத்த தலைமுறைக்கு சுகாதார முறையில் வாழ்வதற்கும், நல்ல சுற்றுச்சூழல் தன்மையை உருவாக்குவதற்கும் மக்களாகவே முன்வந்து பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக்கை தயாரிக்க கூடிய நிறுவனங்கள் மற்றும் விற்பனை செய்யக்கூடிய விற்பனைகள் ஆகியவற்றிற்கு, இதுவரை 110 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு பசுமை பட்டாசுகளை பயன்படுத்த முன்வர வேண்டும். பல்வேறு இயற்கை வேதிப்பொருட்களை வைத்து பசுமைப் பட்டாசுகளை நாம் தயாரிக்க முடியும். பசுமை பட்டாசுகள் இல்லாமல் மற்ற பட்டாசுகளை நாம் எடுக்கும் போது நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது. அதைத் தடுப்பதற்காக தான் பசுமை பட்டாசுகளை நாம் தயார் செய்ய முன்வந்துள்ளோம்.

பசுமை பட்டாசுகளை பொறுத்தவரை 100லிருந்து 110 டெசிபல் ஒளி எழுப்பக் கூடியதாக உள்ளது. பட்டாசு விற்பனை செய்யப்படும் இடங்கள் மற்றும் குடோன்கள் ஆகியவற்றில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று முதலில் பல்வேறு உத்தரவிட்டு பல்வேறு நடவடிக்கைகள் அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

மேலும் தமிழ்நாட்டில் தயார் செய்யப்படும் பட்டாசுகள் தான் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. படிப்படியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்களிலும் பசுமை பட்டாசுகள் மட்டும் தயாரிப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கு பல்வேறு வழிகாட்டுதல்கள் விரைவில் மாசு கட்டுப்பாட்டு துறை சார்பில் வெளியிடப்படும்.

காற்றின் வேகம் தற்போது அதிகமாக இருப்பதால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்வதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காற்று மாசு கட்டுப்படுத்துவதற்கு உண்டான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. காற்று மாசடைவதை முற்றிலுமாக குறைப்பதற்கு மரங்கள் அதிக அளவு வளர்க்க வேண்டும்.

அதனால் தான் குறுங்காடுகள் மூலமாக மரம் தரும் திட்டத்தை அரசு முன் முயற்சி எடுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசங்களில் வெளிநாட்டு மரங்களை நாம் வளர்த்ததால் மூலிகைகள் வளராமல் போய்விட்டது. ஆகையால் மூலிகை அதிக அளவு வளர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்... கடைசி தேதி எப்போ தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.