ETV Bharat / state

"மழை பாதிப்பிற்கு பிறகு பள்ளி கட்டடங்கள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது”- அமைச்சர் அன்பில் மகேஷ்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 7:10 AM IST

minister anbil mahesh poyyamozhi
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Minister Anbil Mahesh: புத்தகங்கள் மழையில் நனைந்து விட்டது என்று சொன்னால், இன்றும் நாளையும் புத்தகங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகர் பகுதிக்கு உட்பட்ட எஸ்.எஸ்.நகரில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன மையத்தில் ’ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ என்ற திட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி குறித்த அனைத்து பள்ளிகளில்‌ 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பை தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

இது குறித்து அமைச்சர் பேசியதாவது , “ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி என்ற திட்டம் கடந்த 2021ஆம் ஆண்டு சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் பூம்புகாரில் தொடங்கப்பட்டு, இன்றைய தினம் புதுக்கோட்டையிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்கள் 15 நாட்கள் இங்கேயே தங்கி இருந்து, அவர்களுக்கு பயிற்சி வழங்குவதுடன், பள்ளிக்கூடம் செல்லும் பொழுது அந்தப் பாடத்திலும் அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்ற நோக்கோடு அதனை ஒட்டியே இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு 15 நாட்கள் இங்கு பயிற்சி வழங்கப்படுகிறது அவர்களுக்கு அவர்கள் தங்கும் நாட்களுக்கு தேவைப்படக்கூடிய உணவு உள்ளிட்ட அனைத்தும் இங்கு வழங்கப்படுகிறது.

இது போன்ற பயிற்சி பெரிய மாநகராட்சி மற்றும் நகரத்தில் மட்டும்தான் செயல்படுத்தப்பட்டு வந்தது. தற்போது கிராமப்புற பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு இதை செயல்படுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர், ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கூடங்கள் பராமரிப்பு செய்ய நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மழையில் புத்தகங்கள் நனைந்து விட்டது என்று சொன்னால், இன்றும் நாளையும் புத்தகங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புத்தகங்கள் எப்போதும் இருப்பு வைத்துள்ளோம்.

அதனால் அந்த புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவிடும். அதனால்தான் இன்று (டிச.11) நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வு கூட 13ஆம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளோம். பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் காலை வேளையில் மாணவர்கள் கூடும் பொழுது, அவர்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற அறிவுரையை வழங்கி விட்டுதான் வகுப்பறைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அந்த வகையில், மாணவர்கள் ஒரு நல்ல மனநிலையில் பள்ளிக்கு வர தொடங்கியுள்ளனர்.

மழை பெய்த 4 மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் கட்டடங்கள் உறுதித் தன்மையுடன் இருக்கிறதா என்பதை அறிய 20 வகையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம். குறிப்பாக, ஊறிய சுவர் பகுதியில் மாணவர்களை விடக்கூடாது, மின் இணைப்புகள் முறையாக இருக்கிறதா, பள்ளி வளாகத்தில் உள்ள கிணறுகள் முறையாக உள்ளதா, போர்வெல் திறந்த வெளியில் உள்ளதா என்பதை முறையாக பார்க்க வேண்டும்.

அதேபோல், மழை பெய்து பள்ளி திறந்த பிறகு, சில இடத்தில் தண்ணீர் தேங்கி அதில் குப்பைகள் சூழ்ந்துள்ளது. அதை கண்கூடாக பார்த்தோம். அதை அந்த பகுதியில் உள்ள மாநகராட்சி, உள்ளாட்சி பிரதிநிதிகள் அகற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் 4,435 பள்ளிகளில் இன்னும் 32 பள்ளிகளில் பணி செய்ய வேண்டியது உள்ளது. நான் பொறுப்பு அமைச்சராக இருந்த பகுதியில் உள்ள 77 பள்ளிகளிலும் தண்ணீர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஆறு பள்ளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதனை தனிக் கவனம் செலுத்தி, உடனடியாக தண்ணீர் வடிக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளோம்.

பாதுகாப்பாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டு, அங்கு மாணவர்கள் அமர்ந்து படிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் விடுமுறை விடும்பொழுது அதனை ஈடு செய்ய, அடுத்தடுத்து வரக்கூடிய சனிக்கிழமைகளில் பள்ளிகளை வைத்துதான் அந்த விடுமுறையை ஈடு செய்வோம். ஆனால் தற்பொழுது அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளதால், அந்த தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரோனாவில் ரூ.1,000 கொடுத்த உத்தமர்..இப்போது ரூ,12,000 நிவாரணமாக கேட்கிறார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.