இறந்து 17 நாள்களாகியும் அடக்கம் செய்ய வழியில்லை - மீனவர் குடும்பம் வேதனை

author img

By

Published : Sep 4, 2021, 10:06 AM IST

வேதனையில் மீனவர் குடும்பம்

வெளிநாட்டில் மீன்பிடிக்கும்போது கடலில் விழுந்து இறந்த மீனவரின் உடலை இந்தியா கொண்டுவருவதில் ஏற்பட்டுள்ள சிக்கலால், அவரது உடல் இன்னும் அடக்கம் செய்யப்படவில்லை. இதனால் 30-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளன.

புதுக்கோட்டை: ஆவுடையார்கோவில் தாலுகா ஆர். புதுப்பட்டினத்தைச் சேர்ந்தவர் அய்யம்பெருமாள். இவரது மகன் திருமணிவாசன் (30) மீனவர். திருமணிவாசனுக்கு கமலி (25) என்ற மனைவியும், ஐந்து, மூன்று வயதுகளில் இரண்டு மகன்களும் உள்ளனர்.

இந்த நிலையில், குடும்ப வறுமை காரணமாக ஜூலை 18ஆம் தேதி பக்ரைன் நாட்டிற்கு மீன்பிடிக்கும் பணிக்காக திருமணிவாசன் சென்றுள்ளார். அங்கு தனது வீட்டின் நிலையை யோசித்து தொடர்ந்து வேலைக்குச் சென்றுவந்தவர், ஆகஸ்ட் 16ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றார்.

அப்போது கடலில் தவறிவிழுந்து, மீன்பிடி படகு இயந்திரத்தின் இறக்கையில் (ப்ரொப்பலர்) அடிபட்டு கைத்துண்டானது. இந்தப் படுகாயத்தால் அவர் தனது உயிரையே இழந்தார்.

இந்தத் தகவல் பக்ரைன் நாட்டிலிருந்து இந்தியாவிற்குத் தகவல் அனுப்பப்பட்டு, தமிழ்நாடு மீன்வளத் துறை அலுவலர்கள் மூலம் திருமணிவாசனின் உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து பரிதவித்த உறவினர்கள், திருமணிவாசனின் முகத்தை கடைசியாகப் பார்க்க வேண்டும் என்றும், உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவருவதற்கு அலுவலர்களிடம் முறையிட்டுள்ளனர். தொடர்ந்து உடலைக் கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், உடலை பக்ரைனிலேயே அடக்கம் செய்ய சம்மதம் தெரிவித்து அதற்கான ஒப்புதல் கடிதத்தையும் மீன்வளத் துறை அலுவலர்களிடம் அளித்துள்ளனர்.

கடைசியாக அடக்கம் நடைபெறுதை காணொலி மூலமாகப் பார்க்க ஏற்பாடுசெய்ய வேண்டும் எனவும், அலுவலர்களிடம் கோரிக்கைவைத்தனர். பக்ரைனில் அதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில், இறந்தவரின் உடல் அடக்கம் செய்யப்படாததால், 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வேலைக்குச் செல்லாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு திருமணிவாசனின் உடலை தமிழ்நாடு கொண்டுவரவோ அல்லது அங்கேயே அடக்கம் செய்து அதனை காணொலி மூலம் காணவோ ஏற்பாடு செய்துதர வேண்டும், கணவரை இழந்து நிற்கும் அப்பெண், குழந்தைகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என இறந்தவரின் உறவினர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர் தவறி விழுந்து உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.