மூன்றாவது அலையை தடுக்க முன்னேற்பாடுகள் தயார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

author img

By

Published : Aug 9, 2021, 11:09 PM IST

மூன்றாவது அலையை தடுக்க முன்னேற்பாடுகள் தயார்

தமிழ்நாட்டில் கரோனா மூன்றாவது அலையை தடுக்க முன்னேற்பாடுகள் தயார் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை: மாத்தூர் அரசு சிறப்பு மேல்நிலைப்பள்ளி, கீரனூர் அரசு மருத்துவமனையில் நடைபெறும் தடுப்பூசி முகாமினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் திருமயம் ஊராட்சி ஒன்றியம் லெம்பலக்குடி கிராமத்தில் 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின் கீழ் உயர் இரத்த அழுத்தம் நீரிழிவு நோய் பாதித்தவர்களுக்கான சிகிச்சை மருந்துப் பொருள்களை அமைச்சர்கள் வழங்கினர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, "மாத்தூர் அரசு சிறப்பு மேல்நிலைப்பள்ளியில் கோவிட் தடுப்பூசி முகாமில் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் 40 வயதை கடந்த நபர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கீரனூர் அரசு மருத்துவமனையிலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு கோவிட் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இம்மருத்துவமனைக்கு கூடுதல் கட்டட வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 98 விழுக்காடு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 60 விழுக்காடு கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கோவிட் பேரிடர் காலத்தில் மக்களை காப்பதற்கு முதலமைச்சர் எடுத்து வரும் சிறப்பான நடவடிக்கைகளால் தமிழ்நாடு இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. 60 விழுக்காடு பேர் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமனால் உயிரிழந்துள்ளனர். இந்த 60 விழுக்காடு நபர்களை காக்கும் வகையில்; முதலமைச்சர் ‘மக்களை தேடி மருத்துவம்” என்ற மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

இத்திட்டம் தொடங்கிய 3 நாள்களில் 25,617 நபர்கள் பயனடைந்துள்ளனர். நீரிழிவு நோயாளிகளுக்கு டாயாலிசிஸ் மற்றும் பிசியோதெரபி சிகிச்சை போன்றவையும் வழங்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஏற்கனவே ரோட்டரி சங்கங்கள் சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. கரோனா மூன்றாவது அலை ஏற்பட்டாலும், அதனை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார்.

மூன்றாவது அலையை தடுக்க முன்னேற்பாடுகள் தயார்

தமிழ்நாட்டில் 1 லட்சம் எண்ணிக்கையில் ஆக்ஸிஜனுடன் கூடிய படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. இதேபோன்று குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகளும் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளது. திருமயம் அரசு சித்த மருத்துவமனை ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டுள்ளதை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், இந்த மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, தரைதளம் அமைத்தல் போன்ற பணிகளை இந்த நிதியாண்டிலேயே மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு டயாலிசிஸ் பிரிவு அமைக்க கோரிக்கை வைத்துள்ளார்கள். எனவே புதுக்கோட்டையில் பிரத்தியேக வசதியுடன் கூடிய டயாலிசிஸ் கருவிகள் கொண்ட மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சமையல் எரிவாயு காலியா... ஒரு மிஸ்ட் கால் போதும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.