ETV Bharat / state

டெல்லியில் மல்யுத்த வீரர்களுக்கு நடந்தது கண்டிக்கத்தக்கது - ப.சிதம்பரம் கண்டனம்

author img

By

Published : May 31, 2023, 8:34 AM IST

P Chidambaram
ப.சிதம்பரம்

மல்யுத்த வீரர்கள் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அதற்கு மாறாக அவர்களை குண்டு கட்டாக தூக்கி கைது செய்வது கண்டனத்துக்குரியது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பு

புதுக்கோட்டை: ஆலங்குடி கொத்தமங்கலத்தில் ரூ.1.25 கோடி மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையப் பணிகளுக்கும், திருமயத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நூலகம் அமைப்பதற்கும், மாநிலங்களவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஒதுக்கியுள்ளார்.

தற்போது இந்த பணிகளை இறுதி செய்வதற்காக பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை ஆகிய துறைகளின் அதிகாரிகளோடு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆலோசனை நடத்தி பணிகள் குறித்து இறுதி முடிவு எடுத்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய ப.சிதம்பரம், "பாராளுமன்ற உறுப்பினர் நிதியை அதிகரிக்க வேண்டும்.

ஆனால் பாஜக அரசு நிதியை குறைக்காமல் இருந்தால் போதும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களை என்னிடம் நிதியை குறைக்காமல் வழங்க மோடியிடம் எடுத்துக் கூற வேண்டும் என்று கூறுகின்றனர். கரோனா காலகட்டத்தில் 2 வருட காலம் நாடாளுமன்ற நிதியை நிறுத்தியதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை செய்ய முடியாமல் தவித்தனர்.

கரோனா காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை நிறுத்தினால் கரோனா கட்டுக்குள் வந்துவிடுமா என்று நாங்கள் கேட்டோம். ஆனால் அதற்கு பதில் இல்லை. மேலும் கரோனாவிற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழித்தனர்.

செங்கோல் குறித்த புனைகதைகள்: நேருவுக்கு கொடுத்த செங்கோல் அலகாபாத் அருங்காட்சியகத்தில் மிகவும் பாதுகாப்பாகத்தான் வைக்கப்பட்டுள்ளது. வாக்கிங் ஸ்டிக்காக இல்லை. நேருவிற்கு செங்கோல் வழங்கும் நிகழ்ச்சியின்போது மவுண்ட் பேட்டன் பிரபு இந்தியாவிலேயே இல்லை, பாகிஸ்தானில் இருந்தார். வரலாற்றை ஆளுநரும், பாஜகவினரும் திரித்துக் கூறுகின்றனர். நடக்காததை நடந்ததுபோல் கூறுகின்றனர்.

1947ஆம் ஆண்டு நடந்த வரலாறு பழைய வரலாறா? மோடி அரசை பொறுத்தவரை, சுதந்திரம் கிடைத்தது மோடியால்தான் என்று கூறுவார்கள். அதற்கு முன்பு சுதந்திரமே இல்லை என்று கூறுவார்கள். நேருவிற்கு நினைவுப் பரிசாக தரப்பட்ட செங்கோல் தற்போது நாடாளுமன்றத்தில் உள்ளது மகிழ்ச்சி.

மணிப்பூர் வன்முறை: மணிப்பூர் மாநிலத்திற்கு உள்துறை அமைச்சர் தாமதமாக சென்றுள்ளார். இது மகிழ்ச்சி. ஆனால், பிரதமர் மணிப்பூர் மாநில பிரச்னை குறித்து இதுவரை வாய் திறக்காதது ஏன்? பிரதமர் அந்த பகுதி மக்களிடம் வன்முறையில் ஈடுபட வேண்டாம், நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம் என்று கூறி இருக்க வேண்டும்.

மல்யுத்த வீரர்கள் விவகாரம்: இதில் சம்பந்தப்பட்டது விளையாட்டுத் துறை அமைச்சரோ அல்லது முக்கிய அமைச்சர்களோ சென்று அவர்களை நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி இருக்க வேண்டும். ஆனால் ,அதற்கு மாறாக 30 நாட்கள் உதாசினப்படுத்திவிட்டு, அவர்களை குண்டு கட்டாக தூக்கி கைது செய்வது கண்டனத்துக்குரியது.

இதில் வேடிக்கை என்னவென்றால், மல்யுத்த வீரர்களை விட போலீஸ்காரர்கள் பலசாலியாக உள்ளனர். போராட்டம் நடத்துவதற்கும், தர்ணா செய்வதற்கும் அனைவருக்கும் உரிமை உள்ளது. தர்ணாவை முடித்து வைப்பதற்கு பல்வேறு வழிகள் உள்ளன.

புதிய நாடாளுமன்ற திறப்பில் குடியரசுத் தலைவரை அழைக்காதது ஏன்? அனைத்து நாடாளுமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு புதிய நாடாளுமன்றம் திறப்பதற்கான அழைப்புகள் அனுப்பும்போது குடியரசுத் தலைவருக்கு ஏன் அழைப்புகள் அனுப்பவில்லை? ஏனென்றால், குடியரசுத் தலைவர் வந்திருந்தால் அவர்தான் திறந்து வைத்திருப்பார். அதுதான் காரணம். அதனால்தான் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விழாவை புறக்கணித்தது.

முதலமைச்சர் முதலீடு ஈர்க்க சென்றாரா? தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டிற்கு சென்றது முதலீடுகளை ஈர்த்து வருவதற்காகத்தான். மற்ற சர்ச்சைகளை பொருட்படுத்த வேண்டாம். அதிமுக ஆட்சியில் நடத்திய தொழில் முனைவோர் மாநாட்டில் எவ்வளவு முதலீடுகள் வந்தது என்பது குறித்து தெளிவுபடுத்தி விட்டு, தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் சென்றுள்ள வெளிநாட்டு பயணம் குறித்து அவர்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.

ஏற்கனவே முதலமைச்சர் கடந்த சில நாட்களில் வெளிநாடு பயணம் செய்து 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளார். ஆகவே விமர்சனங்களை பொருட்படுத்தத் தேவையில்லை.

கள்ள மது விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதா? தமிழ்நாட்டில் நிகழ்ந்த கள்ளச் சாராய மரணங்களை வைத்து சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூற முடியாது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராகத்தான் உள்ளது.
இருப்பினும் கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு கட்டாயம் எடுக்க வேண்டும்.

மேலும் தற்போது பெரும் பகுதியான சோதனைகள் ஜோடிக்கப்பட்ட சோதனைகளாகவே உள்ளது. சில சோதனைகள் உண்மையாக கூட இருக்கலாம், முதலில் சோதனை முடியட்டும்.

தொடர் மணல் கொள்ளை குறித்த கேள்வி: தமிழ்நாட்டில் மணல் கொள்ளை பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது. ஊடகங்களாகிய நீங்கள்தான் மணல் கொள்ளைகளை அம்பலப்படுத்த வேண்டும். மேலும், அதை தடுக்க முயற்சி செய்யும் அதிகாரிகளை தாக்குவது கடும் கண்டனத்துக்குரியது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். தண்டனையை பெற்று தர வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: 'கலைஞர் ஆட்சிக் காலத்தில்தான் குடிநீர் வடிகால் வாரியம் தனித்துறையாக உருவானது' - அமைச்சர் எ.வ.வேலு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.