ETV Bharat / state

"முன்னேற்பாடுகளும், திட்டங்களும் இல்லாமல் எதிர்கட்சியை குறைசொல்லி பயனில்லை" - மாஜி அமைச்சர் ஆவேசம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2023, 10:56 PM IST

ex minister vijayabaskar
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

Ex Minister Vijayabaskar: புதுக்கோட்டையில் அதிமுக-வின் மாவட்ட முன்னாள் நிர்வாகி ஜாபர் அலியின் நினைவு நாளை முன்னிட்டு புதுக்கோட்டை நகர் மன்றத்தில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றது. முகாமில் பங்கேற்ற அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னையில் சுகாதாரத்துறை செயல்பாடு சுனக்கத்தில் உள்ளது என குற்றம் சாட்டினார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கண்டனம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக-வின் மாவட்ட முன்னாள் நிர்வாகி ஜாபர் அலியின் நினைவு நாளை முன்னிட்டு, புதுக்கோட்டை நகர் மன்றத்தில் கண் சிகிச்சை முகாம் மற்றும் மருத்துவ முகாம் இன்று(டிச.10) நடைபெற்றது. இந்நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர் கூறியதாவது, "சென்னையில் சுகாதாரத்துறை செயல்பாடு சுனக்கத்தில் உள்ளது. அரசின் நிர்வாகம் செயலிழந்து விட்டது. தேங்கியிருக்கும் மழை நீரால் மிகப்பெரிய நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பேரிடரில் உயிரிழந்த நிலையில் சாலையில் கிடக்கும் பிராணிகளால் பெரிய அளவிலான தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

பெருகிவரும் நோய் அபாயம்: அவ்வப்போது இயற்கையின் கொடூர சீற்றங்கள் என்பது எதிர்பாராத ஒன்று தான். இயற்கை பேரிடரை எதிர்கொள்ள அந்தந்த அரசிடம் திறன் வேண்டும். இதுபோன்ற வேளைகளில் மக்களின் நம்பிக்கை மற்றும் ஆதாரம் அரசாங்கம் மட்டும்தான். ஆனால் திமுக அரசு இந்த இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் முழுவதுமாக தோல்வி அடைந்து விட்டது.

தற்போதைய சூழலில் கூட சுகாதாரத்துறை மிகவும் தாமதமாக இயங்கி வருகிறது. சுகாதாரத்தின் அடிப்படை செயலாகக் கருதப்படும், சாலைகளில் பிளிச்சிங் பவுடர் போடுவதைக்கூட சென்னை நகரில் உள்ள சாலைகளில் அரசு போடவில்லை. அதேப்போல லாரிகளில் வழங்கப்படும் குடிநீரின் சுகாதாரம் பெரும் கேள்விக்குறியாக உள்ளது. குளோரின் கலந்த குடிநீர் வழங்கப்படுகிறதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் பெருவாரியாக எழுந்துள்ளது. இந்த முறையின் பயன்பாடு பாதிப்படைந்த சென்னை மாநகரில் எந்த இடத்திலும் கண்காணிக்கப்படுவதாக தெரியவில்லை.

முறையான திட்டமிடல் அற்ற திமுக: முறையற்ற குடிநீர் வழங்கப்படும் போது நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எந்த பேரிடர் வந்தாலும் நோய் தொற்றின் அபாயம் என்பது உலக நீதி. அதனை தடுப்பதற்கு அரசு முன்னதாகவே அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ள அரசு எந்தவித திட்டமிடலையும், முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை.

நிவாரணத் தொகையாக தலா 6ஆயிரம் ரூபாய் என அறிவித்து, பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றி விட முடியாது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தான் கேள்வி கேட்க முடியும். இதில் எதிர்க்கட்சிகளை குறை சொல்லி பயனில்லை. இனியாவது சுகாதாரத்துறை விழித்துக் கொண்டு, இயற்கை சீற்றத்தால் சிதலமைடந்த சென்னையின் சுகாதாரத்தை பேணி காக்க முன்வர வேண்டும். குறிப்பாக குடிநீரில் குளோரின் கலந்து உள்ளதா என்ற பரிசோதனைக்குப் பின்னரே பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.

வெள்ள பாதிப்பை கையாளுவதில் சிரமம் கொள்ளும் திமுக: அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற இயற்கை பேரிடர்களின் அத்தியாவசிய பொருளாக உள்ள குடிநீர் மற்றும் பாலுக்கு எந்த விதமான தட்டுப்பாடும் ஏற்படவில்லை. தற்போதைய திமுக அரசிடம் சரியான திட்டங்கள் இல்லாததால் அத்தியாவசிய பொருள்களான பால் மற்றும் தண்ணீர் கூட கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திறமையாக கையாளாகாத காரணத்தினாலே சென்னைக்கு இன்று இத்தகைய நிலைமை ஏற்பட்டுள்ளது" என பல்வேறு விமர்சணங்களை முன்னிறுத்தினார்.

இதையும் படிங்க: "பிரதமர் போட்டியிடும் தொகுதியில் அவருக்கு எதிராக போட்டியிடுவோம்" - விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.