ETV Bharat / state

பூங்காவில் திடீரென நுழைவு கட்டணம் வசூல்! பொதுமக்கள் அதிர்ச்சி!

author img

By

Published : Jul 8, 2023, 8:17 PM IST

புதுக்கோட்டையில், கரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன் இலவசமாக இருந்த பொழுதுபோக்கு பூங்காவில், தற்போது நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை

பூங்காவில் திடீரென நுழைவு கட்டணம் வசூல்

புதுக்கோட்டை: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நகராட்சி சார்பில் புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்கப்பட்டது. பல லட்சம் செலவில் புதுக்கோட்டை நகர் பகுதியில் 10க்கும் மேற்பட்ட பூங்காக்கள் அமைக்கப்பட்டு அவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் சத்தியமூர்த்தி சாலையில், கடந்த 2019 ஆண்டு ரூபாய். 22.50 லட்சம் செலவில், குழந்தைகள் விளையாட ஊஞ்சல் மற்றும் பெரியோர்கள் அமர்ந்து பயன்பெறும் வகையில் இருக்கைகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பூங்கா திறக்கப்பட்டது.

மேலும் இதில் இலவச இன்டர்நெட் Wi-Fi வசதியுடன் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டது. அப்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த பொழுதுபோக்கு நவீன பூங்காவை திறந்து வைத்தார்.

இந்நிலையில் திறந்து சில மாதங்களே இருந்த நிலையில் கொரோனா பெருந் தொற்று நோய் காரணமாக இந்த பொழுது போக்கு பூங்கா மூடப்பட்டது. பின்னர் நோய் தொற்று முடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு, இந்த பூங்காவை திறக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக தற்போது உள்ள அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பூங்கா திறக்கப்பட்டது. அப்போது நுழைவு கட்டணமாக ரூபாய் 10 வசூலிக்கப்படுகிறது. இது குறித்து விசாரிக்கையில், இந்த பூங்காவை தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும். இனிமேல் இந்த நகராட்சி பூங்காவில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் என ஒப்பந்ததாரர் தற்பொழுது அறிவித்திருப்பது, பொது மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 2 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். புதுக்கோட்டை நகரில் எந்த ஒரு பொழுதுபோக்கு இடங்களும் இல்லை என்ற நிலையில் நகராட்சியால் பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட இந்த பூங்காவை திடீரென குத்தகைக்கு விட்டது மட்டுமல்லாமல், குத்தகைதாரர் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்திருப்பதை கண்டு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் நகராட்சி தன் முடிவை திரும்ப பெற வேண்டும் என்றும், ஏற்கனவே இருந்தது போல் பொதுமக்களுக்கு இலவசமாக பூங்காவை பயன்பாட்டிற்கு கொடுக்க வேண்டும் என்றும் மீறி நுழைவு கட்டண வசூலித்தால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என பல்வேறு சமூக அமைப்புகள் அறிவித்துள்ளன.

ஏற்கனவே புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் உள்ள காந்தி பூங்காவை சரிவர பராமரிக்காமல் தற்பொழுது தனியாருக்கு வாடகைக்கு விட்டு தினமும் பல ஆயிரங்கள் தனியார் சம்பாதித்து வரும் வேளையில், மற்றொரு பூங்காவையும் நகராட்சி நிர்வாகம் குத்தகைக்கு விட்டது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஸ்மார்ட்போன் வாங்கினால் 2 கிலோ தக்காளி இலவசம்..! கடைக்காரர் ஸ்மார்ட் ஆபர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.