ETV Bharat / state

வேங்கைவயல் விவகாரம்; மேலும் 10 பேரிடம் உண்மை கண்டறியும் பரிசோதனை செய்ய அனுமதி கோரிய மனு மீது முக்கிய உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 9, 2023, 1:40 PM IST

வேங்கைவயல் விவகாரத்தில் 10 பேரிடம் உண்மை கண்டறியும் பரிசோதனை செய்ய அனுமதி கோரிய சிபிசிஐடி காவல்துறை
வேங்கைவயல் விவகாரத்தில் 10 பேரிடம் உண்மை கண்டறியும் பரிசோதனை செய்ய அனுமதி கோரிய சிபிசிஐடி காவல்துறை

Vengaivayal Issue: வேங்கைவயல் விவகாரத்தில் இதுவரை 30 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் அனுமதி கோரியுள்ள மனுவின் மீதான விசாரணை, இம்மாதம் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை: முத்துக்காடு அடுத்த வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்பாட்டில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில், மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இச்சம்பவம் அரங்கேறி 11 மாதங்கள் ஆகியும் குற்றவாளிகள் இதுவரை கண்டறியப்படவில்லை.

மேலும், சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் இந்த வழக்கில், டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. அது குறித்து நீதிமன்றத்தை நாடியபோது, முதற்கட்டமாக 11 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி, 11 பேரை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

ஆனால், வேங்கைவயலைச் சேர்ந்த 8 பேர் ஆஜராகாத நிலையில், மேலும் 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, பரிசோதனை மேற்கொண்டனர். அதேபோல், இருவருக்கு குரல் மாதிரி பரிசோதனையும் செய்து சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வேங்கைவயல் மக்கள் தொடர்ந்த வழக்கு: அதனை அடுத்து, டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரி கொடுக்க மறுப்பு தெரிவித்த வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்தவர்களில் ஒருவரான முத்துகிருஷ்ணன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பாதிக்கப்பட்ட மக்களையே போலீசார் பரிசோதிப்பதாக வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கின் அடிப்படையில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள மறுப்பு தெரிவித்த 8 பேரும், வழக்கு விசாரணை நடைபெறும் புதுக்கோட்டை வன்கொடுமை நீதிமன்றத்தையே நாடி தீர்வு காணலாம் என்கிற உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட 8 பேரும் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

அதனை அடுத்து, அவர்கள் அனைவரிடமும் சிபிசிஐடி போலீசார் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதற்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் நகலை வழங்கி, அதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களது விளக்கத்தைத் தெரிவிக்கலாம் என நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.

பின்னர் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில், இந்த வழக்கு குறித்து எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் டிஎன்ஏ மாதிரி பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த 8 பேரும், டிஎன்ஏ பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில், ஜூலை 5ஆம் தேதி டிஎன்ஏ பரிசோதனை நடைபெற்றது.

சிறார்களுக்கும் டிஎன்ஏ பரிசோதனை: அதனைத் தொடர்ந்து, இவ்வழக்கில் சிபிசிஐடி போலீசார் 6 சிறார்களுக்கும் டிஎன்ஏ பரிசோதனை செய்ய அனுமதி கேட்டு, புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.
அதனையடுத்து, இறையூர் மற்றும் வேங்கைவயல் கிராமங்களைச் சேர்ந்த 6 சிறுவர்களின் பெற்றோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

மேலும், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதற்கு ஆட்சேபனை தெரிவித்ததைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணை ஜூலை 14ஆம் தேதிக்கு, புதுக்கோட்டை வன்கொடுமை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி ஒத்தி வைத்தார். பின்னர், பெற்றோரின் ஆட்சேபனை தெரிவித்ததை தொடர்ந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

அதனை அடுத்து, வேங்கைவயல், இறையூர் பகுதிகளைச் சேர்ந்த 6 சிறுவர்களின் பெற்றோரும், டிஎன்ஏ பரிசோதனைக்கு சம்மதம் தெரிவித்ததை அடுத்து, பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதனை அடுத்து, வேங்கைவயல் மற்றும் இறையூர் கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்கள் உள்பட 30 நபர்களிடம் டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சிபிசிஐடியின் அடுத்தகட்ட சோதனை: இந்நிலையில், தற்போது அடுத்தகட்டமாக 10 பேரிடம் உண்மை கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ள, சிபிசிஐடி காவல் துறையினர் தரப்பில் புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதி மஞ்சுளா தலைமையில், கடந்த நவ.28-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி காவல் துறையினர் மற்றும் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படும் நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை டிசம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் மேற்கொள்ளவிருக்கும் விசாரணை குறித்து தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

பின்னர், சோதனைக்கான நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிக்க போலீசார் தரப்பில் கால அவகாசம் கோரிய நிலையில், வழக்கின் விசாரணை டிச.8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று (டிச.9) நடைபெற்ற விசாரணையில், வழக்கை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: நாகர்கோவிலில் சாதாரணமாக வெளி மார்க்கெட்டில் விற்கப்படும் ரேஷன் பொருட்கள்… கையும் களவுமாக சிக்கிய ஊழியர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.