புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் பல சாதியப் பாகுபாடு; கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

author img

By

Published : Jan 19, 2023, 8:36 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் பல சாதிய பாகுபாடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலவும் மேலும் பல்வேறு சாதிய பாகுபாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "புதுக்கோட்டை வேங்கைவயலில் அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது. இந்த தண்ணீரை குடித்ததால் பல குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அப்பகுதியில் ஆய்வுசெய்தபோது அப்பகுதியில் இரட்டைக்குவளை முறை வழக்கத்தில் இருந்தது தெரியவந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை பல கிராமங்களிலும் இது போன்ற தீண்டாமை கொடுமைகள் நடைபெற்று வருகின்றன.

ஆகவே, புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் நடந்து வரும் தீண்டாமைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து, அவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், புதுக்கோட்டை வேங்கைவயலில் மலம் கலக்கப்பட்ட நீரைக் குடித்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், புதுக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் புதுக்கோட்டை மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி பிரிவு துணை ஆணையர் ஆகியோர் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

இன்று இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல் மனுதாரர் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டு அதில் மனுதாரர் புதுக்கோட்டை மாவட்டத்தில் 33-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டதில் 49-க்கும் மேற்பட்ட கோயில்களில் சாதியப் பாகுபாடு உள்ளதாகவும், 29 டீக்கடைகளில் வெவ்வேறு விதமான இரட்டைக்குவளை முறைகள் பின்பற்றப்படுவதாகவும், சில கிராமங்களில் குளங்களில் குளிப்பதற்கு அனுமதிக்காமல் தீண்டாமையில் ஈடுபடுவதாகவும், எனவே இது தொடர்பாக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

எனவே, இந்த வழக்குத்தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் புதுக்கோட்டை காவல் துறை கண்காணிப்பாளர் மனுதாரர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: குடிநீரில் மலம் கலந்தது; 21ம் நூற்றாண்டில் அநாகரிகத்தின் உச்சம் - திருமாவளவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.