ETV Bharat / state

ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய எம்எல்ஏ

author img

By

Published : Jun 19, 2021, 6:58 AM IST

Updated : Jun 19, 2021, 11:38 AM IST

கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம். சின்னத்துரை, தனது ஒரு மாத சம்பளம் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாயை, கரோனா நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

எம்.எல்.ஏ
எம்.எல்.ஏ

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஜூன் 18) நடைபெற்ற நிகழ்வொன்றில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம். சின்னத்துரை கலந்துகொண்டார்.

அப்போது தனது ஒரு மாத சம்பளத் தொகையான ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கான வரைவோலையை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், எனது முதல் மாத சம்பளம் முழுவதையும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கியதை மிகவும் பெருமையாகக் கருதுகிறேன்.

மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றிய கந்தர்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உள்ளது. தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளைப் படிப்படியாக நிறைவேற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறோம்.

ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய எம்எல்ஏ
ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய எம்எல்ஏ

சட்டப்பேரவை உறுப்பினராகப் பொறுப்பேற்ற குறுகிய நாள்களுக்குள், கந்தர்வகோட்டை தொகுதியில் அதிக எண்ணிக்கையிலான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கறம்பக்குடி துணை மின் நிலையத்தில் பழுதடைந்திருந்த பத்து எம்விஏ மின்மாற்றியானது அமைச்சர்களின் உதவியோடு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

வெள்ளாளவிடுதி -ஆத்தங்கரைவிடுதி இடையே ஆற்றில் ரூ.13 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு மாவட்ட அமைச்சர்களின் உதவியோடு முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. மாவட்டத்தின் நீராதாரத்தை மேம்படுத்துவதற்கு காவிரி - குண்டாறு - வைகை இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.

கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம். சின்னத்துரை
கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம். சின்னத்துரை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய தாலுகாக்களில் குறிப்பிட்ட அளவு, காவிரி பாசனப்பகுதி வருகிறது. ஆனால், முதலமைச்சர் அறிவித்துள்ள குறுவை சாகுபடிக்கான தொகுப்பில், இந்தப் பகுதி விடுபட்டுள்ளது.

அதனால் தமிழ்நாடு அரசு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காவிரி பாசன விவசாயிகளும் பயன்பெறும் வகையில் குறுவை சாகுபடிக்கான தொகுப்பு நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒன்றிய அரசு ரத்துசெய்ய வேண்டும். இதற்கான முயற்சிகளை தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்போடு மேற்கொள்வேன்” என்றார்.

இதையும் படிங்க: திமுக எல்எல்ஏக்கள் கூட்டம் - அரசு தலைமை கொறடா அறிவிப்பு!

Last Updated : Jun 19, 2021, 11:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.