ETV Bharat / state

ஏழை மக்களின் நலன்கருதி பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் சிவசங்கர்

author img

By

Published : Apr 16, 2022, 10:20 PM IST

அமைச்சர் சிவசங்கர் பேட்டி
அமைச்சர் சிவசங்கர் பேட்டி

ஒன்றிய அரசு தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வரும் சூழலில், ஏழை மக்களின் நலன்கருதி பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் முதலமைச்சர் பாதுகாத்து வருகிறார் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் பெரம்பலூரில் தெரிவித்தார்.

பெரம்பலூர்: தமிழ்நாடு முழுவதும் ஓராண்டிற்குள் ஒரு லட்சம் விவசாய இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து, மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 16) காணோளி காட்சி மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் மற்றும் வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள விவசாயிகள் இந்நிகழ்ச்சியை நேரலையில் காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதையான் கோயில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அமைச்சர் சிவசங்கர் பேட்டி
நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், "முதலமைச்சரின் சீரிய முயற்சியில் ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சியின் வாயிலாக பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 1,268, குன்னம் தொகுதியில் 609, அரியலூர் தொகுதியில் 883, ஜெயங்கொண்டம் தொகுதியில் 805 இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.40 கோடியே 40 லட்சம் செலவில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலமாக 6 ஆயிரத்து 488 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்" என்றார்.

ஆளுநரின் தேநீர் விருந்து மக்கள் வரிப்பணம்: மேலும் பேசிய அவர், "ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வழிகாட்டும் திட்டமாக இந்த இலவச மின் இணைப்பு திட்டம் உள்ளது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட நிர்வாக சீர்குலைவு காரணமாக தமிழ்நாட்டில் கிராம பகுதிகளில் மின்சாரம் வழங்குவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளன. அதனை விரைந்து திமுக அரசு சரிசெய்யும். ஆளுநர் அளித்த தேநீர் விருந்து என்பது தமிழக மக்களின் வரிப்பணத்தில் தான் அளிக்கப்பட்டுள்ளது.

இதில் டீ செலவு மிச்சம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருப்பது அவர் ஐபிஎஸ் படித்தவரா? தமிழக மக்களின் நாடித்துடிப்பை அறிந்தவரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக ஆளுநர் அளித்த தேநீர் விருந்து புறக்கணிக்கப் படவில்லை.

தமிழ்நாடு மக்களின் உணர்வை பிரதிபலிக்கின்ற வகையில் பாஜக தவிர்த்து மீதமுள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவின் பேரில் இயற்றப்பட்ட நீட் எதிர்ப்பு தீர்மானத்தினை ஆளுநர் தாமதப்படுத்தி வருவது தமிழ்நாடு மக்களுக்கு கசப்பை தருகிறது. அதற்காகவே இந்த தேநீர் விருந்து புறக்கணிப்பு நடைபெற்றுள்ளது. இதனை மக்களின் பிரதிபலிப்பாக அண்ணாமலை பார்க்க வேண்டும்.

பேருந்து கட்டணம் உயர்வில்லை: அம்பேத்கர் பிறந்த தினத்தில் பாஜக வேண்டுமென்றே திட்டமிட்டு மரியாதை செலுத்தும் நிகழ்வில் வன்முறையை ஏற்படுத்தி வருகிறது. இலவச திட்டங்கள் என்பது பொதுமக்களின் வரிப்பணத்தில் ஏழை எளிய மக்களுக்கு கிடைக்காத திட்டங்களைக் கொண்டு செல்வதாகும். அதை தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. அது ஏழை எளிய மக்களின் உரிமையாகும். சொத்து வரி என்பது ஆண்டுதோறும் ஏற்றக்கூடிய ஒன்றாகும். கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்ததால் தற்பொழுது கணிசமான அளவு உயர்த்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

பேருந்து கட்டணமும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறதே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வரும் சூழலில் தமிழ்நாடு அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பதற்கு காரணம், இது ஒரு சேவைத்துறை ஆகும். ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தான் டீசல் விலை உயர்வையும் தாண்டி முதலமைச்சர் பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் பாதுகாத்து வருகிறார்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'ஓராண்டிற்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வரலாற்று சாதனை' - முதலமைச்சர் ஸ்டாலின்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.