குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

author img

By

Published : Aug 21, 2021, 1:52 PM IST

perabalur collector inspection

தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாக கட்டடத்தை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட் பிரியா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பெரம்பலூர் : கடந்த அதிமுக ஆட்சியின்போது பெரம்பலூர் அடுத்துள்ள கவுள்பாளையம் கிராமத்தில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 504 வீடுகள் கொண்ட குடியிருப்பு கட்டடங்கள் கட்டப்பட்டன. 42 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த கட்டடத்தில் தற்போது 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.

மேலும், கட்டப்பட்ட வீடுகளில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு குடியிருக்க அவர்கள் வருவதற்குள் பல்வேறு வீடுகள் விரிசல் ஏற்பட்டு, சிமெண்ட் பூச்சி கலவைகள் உதிர்ந்து கொட்டி சேதம் அடைந்துள்ளன. இது குடியிருக்கும் மக்கள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட் பிரியா நேற்று (ஆக.20) குடியிருப்பு வளாகத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ”கட்டடத்தில் சிறுசிறு குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான சீரமைப்பு பணிகள் உடனடியாக சரி செய்து தரப்படும்.

பயனாளிகள் எப்பொழுதும் தொடர்புகொள்ளும் வகையில் அலுவலர்களின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தி குறைபாடு இருக்கும் நபர்கள் உடனடியாக தங்களது வீட்டின் குறைகளை சரி செய்துகொள்ளலாம்” என்றார்.

இதனைத் தொடர்ந்து குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் தெரிவிக்கையில், ”குறைபாடுகள் உடனுக்குடன் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை மறு சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

மேலும் ஒப்பந்தக்காரர்களுக்கு இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் பணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, கட்டுமான பணிகளில் உள்ள குறைபாடுகள் சீரமைத்துத் தரப்படும், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.