பெரம்பலூரில் நகைக்கடை உரிமையாளரை கத்திவைத்து மிரட்டி 105 சவரன் நகைகள் கொள்ளை

author img

By

Published : Nov 27, 2021, 11:58 AM IST

பெரம்பலூரில் நகை கடை

பெரம்பலூரில் பிரபல நகைக்கடை உரிமையாளரை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய அடையாளம் தெரியாத நபர்கள் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான 105 சவரன் தங்கநகை, ஒன்பது கிலோ வெள்ளிப் பொருள்கள், சொகுசு கார் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர்: பெரம்பலூரில் உள்ள பிரபல நகைக்கடையின் உரிமையாளர் கருப்பண்ணன். இவருக்கு சங்குப்பேட்டை அருகேயுள்ள சர்ச் சாலையில் பூர்விக வீடு உள்ளது. அதேபோல எளம்பலூர் சாலையில் உள்ள ஜுவல்லரியின் மாடியிலும் ஒரு வீடு உள்ளது.

சங்குப்பேட்டை வீட்டில் கருப்பண்ணன் மட்டும் இரவு தங்கியுள்ளார். இவரது மனைவி பரமேஸ்வரி, மகள் ரேணுகா ஆகியோர் எளம்பலூர் சாலையில் நகைக் கடையின் மேல் உள்ள வீட்டில் தங்கியுள்ளனர். இவரது மகன் ஆனந்த் வேலை விஷயமாகத் திருச்சி சென்றுவிட்டார்.

பிரபல நகைக்கடை  உரிமையாளர் வீட்டில் கொள்ளை
பிரபல நகைக்கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளை

இந்நிலையில் மகன் வந்துவிடுவதாகக் கூறியதால், கருப்பண்ணன் தனது வீட்டின் கதவைத் திறந்துவைத்துள்ளார். அப்போது இரவு 11 மணியளவில் முகமூடி அணிந்த நிலையில், உள்ளே சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் மூன்று பேர், வீட்டில் தனியாக இருந்த கருப்பண்ணனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர்.

சத்தம் போடாம பீரோ சாவியை கொடு!

இதனையடுத்து அவரிடமிருந்து பீரோ சாவியை வாங்கி, அதனைத் திறந்து பீரோவிலிருந்த நெக்லஸ், செயின், மோதிரம் உள்ளிட்ட 105 சவரன் தங்க நகைகளையும், ஒன்பது கிலோ வெள்ளிப் பொருள்களையும் கொள்ளையடித்துள்ளனர். மேலும் சத்தம் போடக்கூடாது என்று மிரட்டிய கொள்ளையர்கள், கருப்பண்ணனின் வீட்டு வாசலில் நின்றிருந்த சொகுசு காரில் ஏறித் தப்பிச்சென்றுள்ளனர்.

இது குறித்து கருப்பண்ணன் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் நகர காவல் துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தடய அறிவியல் சோதனையும், மோப்பநாய் சோதனையும் செய்யப்பட்டுள்ளது. வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா பழுதாகிவிட்ட நிலையில், சாலையில் உள்ள சிசிடிவி கேமரா மூலமாக காவல் துறை உயர் அலுவலர்கள் தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.

பிரபல நகைக்கடை  உரிமையாளர் வீட்டில் கொள்ளை
பிரபல நகைக்கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளை

இது குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி நேரில் வந்து விசாரணை நடத்தினார். கொள்ளைபோன பொருள்களின் மதிப்பு சுமார் 60 லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. 24 மணி நேரமும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள நகரின் மையப் பகுதியில், நடந்த இந்தக் கொள்ளைச் சம்பவத்தினால் பெரம்பலூர் மக்களிடையே அச்சமும் பீதியும் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: School,College Leave : கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.