ETV Bharat / state

'வருமான நோக்கத்திற்காக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது' - முன்னாள் மின்துறை அமைச்சர் குற்றச்சாட்டு!

author img

By

Published : Jul 21, 2022, 9:20 PM IST

'வருமான நோக்கத்திற்காக மின் கட்டணத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி உயர்த்தியுள்ளார்' என முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.

வருமான நோக்கத்திற்காக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது - முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு!
வருமான நோக்கத்திற்காக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது - முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு!

நாமக்கல்: முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி, இன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, “மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் முறையாக அறிவிக்காமல், மின்சாரக் கட்டண உயர்வை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படும் வகையில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

நிர்வாகத் திறமையின்மையால் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின்சாரத்துறை என்பது சேவைத்துறை. அதில் நஷ்டம் ஏற்படுவது என்பது சாதாரண விஷயம். ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்சாரத்துறைக்கு வருமான நோக்கத்திற்காக கட்டணத்தை உயர்த்தியுள்ளார். கட்டண உயர்வுக்கு மத்திய அரசு மீது மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீண் பழி சுமத்துகிறார்.

மின் கட்டண உயர்வால் மேற்கு மண்டலத்தில் உள்ள விசைத்தறி தொழில் உள்பட பல்வேறு தொழில்கள் பாதிக்கப்படும். எனவே, உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை அரசு திரும்பப் பெற வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலினிடம் நற்பெயர் வாங்குவதற்காக, அவசர கதியில் விவசாயிகளுக்கு 1 லட்சம் மின்சார இணைப்பு வழங்கப்பட்டது.

ஆனால், தற்போது ஓவர் லோடு காரணமாக பல இடங்களில் மின்மாற்றிகள் பழுதடைந்து வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் உற்பத்திக்கு அதிகச்செலவீனங்கள் ஆகும் என்பதால் உடன்குடி, உப்பூர் மின் உற்பத்தித்திட்டங்கள் கைவிடப்பட்டது. ஆனால், தற்போதைய அரசால், அந்த திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரம் 3 ரூபாய்க்கு கிடைக்கும்போது, இத்திட்டத்தை செயல்படுத்தினால் யூனிட்டுக்கு 7 ரூபாய் வரை உற்பத்தி செலவு ஆகும். இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி என்னப் பதில் சொல்லப் போகிறார்?

திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும் எனக் கூறினர். ஆனால் தற்போது தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் அதிகரித்து வருகிறது” என தங்கமணி குற்றம்சாட்டினார்

வருமான நோக்கத்திற்காக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது - முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு!

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது - அமைச்சர் செந்தில் பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.